ரஜினி படங்களுக்கு அடுத்து தன் படத்தின் வியாபாரம்?: சூர்யா பதில்

ரஜினி படங்களுக்கு அடுத்து தன் படத்தின் வியாபாரம்?: சூர்யா பதில்
Updated on
1 min read

ரஜினி படங்களின் வியாபாரத்தைத் தொடர்ந்து சூர்யா படத்தின் வியாபாரம் இருப்பதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சி 3'. பல சமயங்களில் தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஸ்டூடியோ க்ரீன் சக்திவேலன், "'சி 3' பார்த்துவிட்டேன். இப்படம் எங்களுக்கு லாபகரமாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு இப்படம் வியாபாரமாகியுள்ளது. எங்களிடமிருந்து படங்களை வாங்கியவர்களும் நல்ல லாபகரமாக விற்றுள்ளார்கள். இப்படம் கண்டிப்பாக 200 கோடி ரூபாய் வசூல் செய்யும்" என்று தெரிவித்தார்.

இறுதியில் நன்றியுரையில் பேசிய ஞானவேல்ராஜா, "குறுகிய வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் படத்தை திரையிட்டு காட்டினோம். அனைவருமே நன்றாக இருப்பதாக தெரிவித்தார்கள். திரையுலகில் ரஜினி சார் படங்களுக்குப் பிறகு சூர்யா சாரின் படங்களின் வியாபாரம் தான் உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அவருக்கு பெரிய வியாபாரம் உள்ளது. ரசிகர்களிடம் இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்.

முதல்வரின் மரணம், பண மதிப்பு நீக்கம், வார்தா புயல் என பல்வேறு காரணங்களால் மட்டுமே வெளியீட்டை தள்ளி வைத்தோம். பிப்ரவரி எங்களுக்கு அதிர்ஷ்டமான மாதம்" என்று தெரிவித்தார்.

ஞானவேல்ராஜாவின் பேச்சைத் தொடர்ந்து சூர்யாவிடம், "ரஜினி படங்களின் வியாபாரத்தைத் தொடர்ந்து உங்களுடைய படம் வியாபாரம் என்கிறார்கள். அப்படியென்றால் கமல் படத்தின் வியாபாரத்தை தாண்டிவிட்டீர்கள் என எடுத்துக் கொள்ளலாமா" என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சுதாரித்துக் கொண்ட சூர்யா, "வியாபாரத்துக்குள் எப்போதுமே நான் செல்வது கிடையாது. அதைப் பற்றி எல்லாம் நான் பெருமையாக பேசுவதும் கிடையாது. ரஜினி, கமல் போன்றவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள். நான் சின்னப் பையன்" என்று நழுவிக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in