

நல்ல படங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று 'கடுகு' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.
இயக்குநர் ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கடுகு'. விஜய் மில்டன் இயக்கி, தயாரித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி மார் 24ம் தேதி வெளியிடுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா இசையை வெளியிட, கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார்.
இவ்விழாவில் சூர்யா பேசியது, "என்னிடம் உள்ள அனைத்துமே சினிமா கொடுத்தது. இங்கு இருக்கும் அத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் சினிமாவில் வாழ்க்கை கிடைத்துள்ளது. சினிமாவுக்கு நாங்க திருப்பி என்ன செய்தோம் என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல தான் 2டி நிறுவனத்தைப் பார்க்கிறேன்.
நான் அல்லாத படங்களையும் வெளியே கொண்டு வரவேண்டும் , நல்ல படங்களையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். ட்ரீம் வாரியர், பொட்டென்சியல், ஸ்டுடியோ க்ரீன் என் குடும்பத்தினர் சார்ந்து பல நிறுவனங்கள் இருந்தாலும் நான் நேரடியாக செய்ய வேண்டும் என தோன்றியது. அதனால தான் 2டி நிறுவனத்தை ஆரம்பித்தேன்.
முதலில் படம் தயாரிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தேன். 'பசங்க 2', '36 வயதினிலே' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தோம். எப்போதுமே சிறு பொருட்செலவில் தான் மனதார பல விஷயங்கள் நடக்கும். என்ன பிரச்சினை வந்தாலும் நடத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் வரும்.
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு. மறுபடியும் ஒரு கருவில் இருந்து வெளியே வந்தால் பிறகு அதுக்குள்ள போக முடியாது என்று சொல்வார்கள். ஆனால் மீண்டும் அதுபோல ஒரு இடத்துக்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால் அதுபோன்ற எண்ணத்தோடு, வெறியோடு இருப்பவர்களுடன் நான் இணைந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர்களோடு இணைந்தேன்.
'கடுகு' படம் பார்த்தோம். ரொம்ப நல்ல படம் உடனே வெளியிட முடிவு செய்தோம். இது ஒரு புது முயற்சி. இதற்கு நான் ஒரு பாலமாக மட்டும் தான் இருக்கிறேன். இங்குள்ள நடிகர்கள் அனைவரும் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் தான் தெரிவார்கள். கதாபாத்திரத்தை முன் வைத்து கதை சொல்வது எனக்கு பிடிக்கும். அப்படி சொன்னால் எனக்கு உடனே ஈர்ப்பு வரும். அப்படித்தான் 'நந்தா' போன்ற படங்களில் நடித்தேன்.
எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இப்படம் பிடிக்கும். படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்திற்குள் போய்விடுவோம். புதிய கதையம்சத்தில் யார் படம் எடுத்தாலும் ரசிகர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சின்ன படம், பெரிய படம் என்று பார்க்காமல் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பார்கள். இந்நிகழ்ச்சி வித்தியாசமான முறையில் நடக்கிறது. இதில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராட்டுக்கள், அவரது சேவைகளுக்கு பாராட்டுக்கள்" என்று பேசினார் சூர்யா.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார். இந்தியாவிலேயே வரி செலுத்தும் ஒரே ஆட்டோ ஒட்டுநர் அண்ணாதுரை மட்டுமே.
சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர். கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டு செல்லலாம். கோவில் போல சேவையாக இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு வகைகள் பரிமாறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.