

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் என்று அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
முன்னதாக, நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
நடிகர் சங்கத்தில் முந்தைய நிர்வாகம் செய்த முறைகேடுகள் பல ஆவணங்கள் மற்றும் விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது. முறைகேடுகளின் விசாரணை முடிந்து உண்மை தெரியும் வரை முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகிய மூவரையும் தற்காலிகமாக நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி இருக்கிறோம் என்றும் நடிகர் சங்கம் கூறியது.
இதுதொடர்பாக சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
''நடிகர் சங்க விவகாரத்தில் என்னை, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை நீக்கியதாக பத்திரிகையில் வந்த செய்தியைத்தான் தெரிந்துகொண்டேன். முறைப்படி நீக்கியதற்கான எந்தக் கடிதமும் இதுவரை எனக்கு வரவில்லை. விளக்கம் கேட்டும் எந்தக் கடிதமும் அனுப்பப்படவில்லை.
நடிகர் சங்கத்தில் முறைகேடு ஏதாவது நடந்திருக்கிறது என்றால், சம்பந்தப்பட்ட எங்களை அல்லது என்னை நேரில் அழைத்து இந்தந்த மாதிரியான முறைகேடுகள் நடந்திருக்கிறது என்று கேட்டிருந்தால் விளக்கம் அளிப்பதற்கு நான் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்தமாதிரி எந்தவிதமான தகவல்களும் அனுப்பப்படவில்லை.
அவர்களால் நியமிக்கப்பட்ட ஒரு ஆடிட்டர் முறைகேடுகள் நடந்திருப்பதாக சொல்லி குற்றச்சாட்டுகள் கூறி புகார்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், முறைப்படி எல்லா ஆவணங்களும், விளக்கங்களும் கொடுத்து அதன்பிறகுதான் நாங்கள் வெளியே வந்தோம். பொதுக்குழு கூட்டம் இந்த மாத கடைசியில் கூட்டப்பட வேண்டும். அந்தப் பொதுக்குழுவில் நான், ராதாரவி, வாகை சந்திரசேகர் மூவரும் கலந்துகொண்டு அவர்களிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற வேண்டிய சூழ்நிலை வருவதால் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி அதில் கலந்துகொள்ள விடாமல் வெளியேற்றியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது.
எங்கள் மீது குற்றம்சாட்டு வைக்கும் ஒவ்வொரு முறையும் மாறிமாறி ஒவ்வொரு தொகையை கூறி முறைகேடு நடந்ததாக கூறி வருகிறார்கள். அப்படியென்றால் எதுதான் உண்மை? என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். இப்போது எங்களை நீக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் மூலமாக முறையிட்டு நீதியை பெறுவோம்'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.