

அமீர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தின் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ராகவன் இயக்கத்தில் ஆர்யா, கேதரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கடம்பன்'. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்காக தனது உடலமைப்பை பெரியளவுக்கு மாற்றியமைத்திருக்கிறார் ஆர்யா. இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
'கடம்பன்' படத்தைத் தொடர்ந்து நடிப்பதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைக் கேட்டு வந்தார் ஆர்யா. அமீரும் ஆர்யாவை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார். இக்கதையின் நாயகன் பெரும் பலசாலியாக இருக்க வேண்டும் என்பதால் ஆர்யா அதற்கு சரியாக இருப்பார் என்று கருதி அமீர் பேசியிருக்கிறார் என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன், ஒளிப்பதிவாளராக ராம்ஜி ஆகியோர் பணியாற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.