இணையவாசிகளின் சினிமா கருத்துகள்: பாலாஜியின் பரந்த பார்வை
பிக் எஃப்.எம் வானொலியில் பணியாற்றி வருபவர் பாலாஜி. தொடர்ச்சியாக படங்களை விமர்சனம் செய்து வந்த நிலையில், 'ஆல் இன் ஆல் அழகுராஜா' மற்றும் 'சேட்டை' படங்களுக்கு செய்த விமர்சனத்தால் சர்ச்சையில் சிக்கினர்.
பலரும் தொலைபேசியில் மிரட்டல் விடுக்கிறார்கள் என்று தனது சினிமா விமர்சனம் நிகழ்ச்சியை நிறுத்தினார் பாலாஜி. நடிகர் சித்தார்த், சிம்பு, இயக்குநர் சி.எஸ்.அமுதன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாலாஜிக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.
தற்போது ஒரு படம் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் படங்களின் விமர்சனம் வந்துவிடுகிறது. 'அஞ்சான்' உள்ளிட்ட பிரம்மாண்ட தயாரிப்பு படங்களும் இதில் இருந்து தப்பவில்லை.
இந்த நிலையில், சமூக வலைத்தளம் விமர்சனங்கள், புதிய படங்கள் குறித்த ரசிகர்களின் கருத்துகள் குறித்து பாலாஜி கூறும்போது, "ரொம்ப நாட்கள் முன்னாடி இல்ல, சில (ஏன், பல) பேர் தன்னோட அதிகாரத்தை மற்றவர்களை கட்டுப்படுத்துறத்துக்காகவும், இதனால எல்லோருக்கும் பொதுவான விஷயங்களிலும்கூட அவங்களோட கருத்துக்கள் வெளியுலகிற்கு தெரியாம போய்விடுது.
ஒன்று, பத்து, நூறு பேர் கொடுத்து / மறுத்து/ மிரட்டி பார்த்து விட்டார்கள். அப்புறம்!?! இப்போ என்ன நடந்தது!?! எத்தனை பேரை போய் நிறுத்த முடியும். இப்போதாவது அந்த அதிகாரமிக்க பெரிய புள்ளிகள் புரிந்து கொள்ளவேண்டும், ஒருவர் தான் பேசுற வார்த்தைகளை மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். உலகிற்கு பொதுவான விஷயங்களில் அவங்க அதிகாரத்தைச் செலுத்த முடியாது. அதுவும் 10 லட்சம் மக்களோட கருத்துகளில் அவங்க ஆதிக்கம் செலுத்த முடியாது. தான் சொல்லறது மக்களை சென்றடைய ஒருவர் டி.வி. / ரேடியோ/ பிரஸ்-ல இருக்க வேண்டியதில்ல. அவங்க சொல்லணும்-னு நினைக்கிறத சொல்லலாம், எப்படி சொல்லணும்-னு நினைக்கிறாங்களோ அப்படி சொல்லலாம். இதுதான் இணையத்தின் பலம்" என்று கூறியிருக்கிறார்.
