

'நல்லாத்தான் இருக்கேன்' என்று மருத்துவமனையில் இருந்து தொலைபேசி மூலம் கூறியிருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
நேற்று காலை பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜா, புதிய படத்திற்கான பணிகளிலும், டிசம்பர் 28ம் தேதி நடைபெறவுள்ள விழாவிற்கான பாடல் பதிவிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
நெஞ்சு வலி குறித்து அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்ட மருத்துவர்கள் 48 மணி நேரம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஒய்வு இல்லாமல் தொடர்ச்சியாக பணியாற்றிதே இதற்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். அதுமட்டுமன்றி, 48 மணி நேர பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்ய இருக்கிறார்கள்.
28ம் தேதி மலேசியாவில் நடைபெற இருந்த 'KING OF KINGS' என்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்வதாக இருந்தார். நேற்று (டிசம்பர் 23) யுவன் சங்கர் ராஜா உடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பத்திரிக்கையாளர் மத்தியில் தொலைபேசி வாயிலாக மருத்துவமனையில் இருந்து பேசிய இளையராஜா, "நல்லாத்தான் இருக்கேன். எப்படி இருக்கீங்க’?னு யாராவது கேட்டால் நான் Usualஆ சொல்றது, ‘அப்டியேதான் இருக்கேன்’னு தான். இப்பவும் அதேதான் சொல்றேன்.
என் ஹெல்த்தை பற்றி யாரும் கவலைப்படவேண்டாம். என் ஹெல்த் என்னை நல்லா பார்த்துக்கும். நான் வந்து உங்களை சந்திக்கிறேன்.. வந்துர்றேன்.. வந்துர்றேன்..” என்று கூறியுள்ளார்.