

சிம்பு நடித்துவரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.
3 விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. 3 தோற்றங்களில் 'மதுரை மைக்கேல்' தோற்றம் மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. 'அஸ்வின் தாத்தா' தோற்றத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை 2 பாகங்களாக வெளியிட தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாகம் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தில் 'மதுரை மைக்கேல்' மற்றும் 'அஸ்வின் தாத்தா' ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுடன் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதற்கான படப்பிடிப்பு நேற்றிரவு(மே 12) நடைபெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் வரும் காட்சிகள் புதுமையாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.
ஜூன் 23-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளதால், எடிட்டிங் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.