

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி கொடுத்த அறிக்கையால் இயக்குநர் சேரன் அ.தி.மு.கவில் சேரப் போகிறார் என்று செய்தி பரவியது. இதனை இயக்குநர் சேரன் மறுத்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு இயக்குநர் சேரன் வாழ்த்து தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுமட்டுமன்றி அம்மா திரையரங்குகள் தொடங்குவதற்கும் நன்றி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் சேரன், அ.தி.மு.கவில் இணையப் போகிறார் என்று செய்திகள் பரவியது. இச்செய்தியினை மறுக்கும் வண்ணம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளார் சேரன்.
அதில் கூறியிருப்பது," ஹாஹாஹா..... நான் அதிமுக வில் சேரப்போவதாக ஒரு வதந்தி இன்று பரவ ஆரம்பித்து என் காதுக்கே வந்தது ஒரு பத்திரிக்கை நிருபர் மூலமாக...
மூன்று நாட்களாக தொடர்ந்து முதல்வரை பாராட்டி என் FBல் எழுதுவதாலும் பத்திரிகை செய்தியாக அது மாறுவதாலும் நான் அந்த கட்சியோடு சேரப்போகிறேன் என நினைத்துவிட்டார்கள் போல.. அரசாங்கம் மக்களுக்காக.. மக்களுக்கான நன்மை கிடைக்கும் திட்டமோ செயலோ அரசாங்கம் செய்யும்போது நடுநிலையாளர்கள் பாராட்டவேண்டும். அப்போதுதான் தான் செய்யும் செயலுக்கான வரவேற்பைப் பார்த்து, தொடர்ந்து மக்களுக்கு அரசு நிறைய செய்ய முன்வரும்.
ஒரு வருடத்திற்கு முன் தூக்குதண்டனை என்ற மனித வாழ்வியலுக்கு விரோதமான சட்டத்தையே முழுமையாக அகற்றக்கோரி ஒரு ஆவணப்படம் தயாரித்தேன்.... அதன் வழியில் இன்று அரசாங்கம் 7 பேரை விடுதலை செய்ததோடு அல்லாமல் தமிழ்நாட்டின், தமிழ்மொழியின் மானம் காக்க, ஒரு இனத்தின் மீது சுமத்தப்பட்ட பழி அகற்றப்பட முன்னோடியாக செயல்படும் முதல்வரை பாராட்டுவதற்கும், என் தொழில் சில தாதாக்களின் கைகளுக்கு மாறி சிக்கிக்கொண்டு சிலர் மட்டுமே பணம் கொள்ளையாக சம்பாதிக்க, நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை இன்று திரைஉலகில்.
கட்டண உயர்வு காரணமாக மக்கள் படம் பார்க்க வரும் வாய்ப்பு குறைந்து, வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில் திருட்டு விசிடி-யில் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்... இந்த நிலையை அரசின் அம்மா திரையரங்கம் திட்டம் மாற்றிவிடவும், மறுபடியும் சினிமாத்தொழில் தழைத்தோங்கவும் வாய்ப்பிருக்கிறது.
இதுவே நான் இந்த இரண்டு நாட்களும் முதல்வர் பற்றி எழுத காரணம்... அதுக்காக எனக்கு அதிமுக உறுப்பினர் அட்டை வாங்கி மாட்டிருவிங்கபோல.. ஓட்டுப்போடவே நூறு முறை யோசிக்கிற ஆளு நானு.." என்று கூறியிருக்கிறார்.