

'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து தான் இயக்கவுள்ள படத்திலும் தனுஷ் நடிப்பதாக இயக்குநர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க, வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைக்க தனுஷ் தயாரிப்பில் வெளியானது.
தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் 2014ம் ஆண்டு அதிக அளவு லாபம் சம்பாதித்த படமாக அமைந்தது.
'வேலையில்லா பட்டதாரி' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அப்படக்குழு வேறு ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள் என்று செய்திகள் உலவின. ஆனால், அச்செய்தி குறித்து படக்குழுவினர் யாருமே கருத்து தெரிவிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, டிசம்பர் படப்பிடிப்பு, தனுஷுக்கு ஜோடியாக 'கயல்' ஆனந்தி என மீண்டும் செய்திகளுக்கு இறக்கை கட்டின. இது குறித்து இயக்குநர் வேல்ராஜ், "மீண்டும் தனுஷ் படம் இயக்கவிருப்பது உண்மை தான். ஆனால், நாயகியாக ஆனந்தி ஒப்பந்தம் என்பதில் உண்மையில்லை.
தனுஷிடம் இரண்டு வரியில் எனது கதையினை கூறியிருக்கிறேன். அவருக்கு மிகவும் பிடித்திருப்பதால், தற்போது திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். 'வேலையில்லா பட்டதாரி' பாணியில் இதுவும் கமர்ஷியல் படமாக அமையும். எப்போது படப்பிடிப்பு என்பதெல்லாம் தற்போதைக்கு முடிவு செய்யவில்லை" என்று தெரிவித்து இருக்கிறார்.
'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் தெலுங்கிலும், இந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இந்தியில் தனுஷ் நடித்து, தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.