

'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் டாஸ்மாக்கில் இடம்பெறும் காட்சிகளே கிடையாது என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்திருக்கிறார்.
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கடவுள் இருக்கான் குமாரு'. சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்திருக்கிறார்.
இப்படம் முழுக்க பயணத்திலேயே அமைந்திருக்கும் கதை என்பதால் கிழக்கு கடற்கரை சாலை, பாண்டிச்சேரி, கோவா மற்றும் சென்னையில் டிராஃபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கி இருக்கிறது படக்குழு.
ராஜேஷ் முந்தைய படங்களில் டாஸ்மாக்கில் இடம்பெறுவது போன்ற காட்சிகள் இடம்பெறும். அக்காட்சிகளில் காமெடியை வைத்திருப்பார்கள். ஆனால் இப்படம் குறித்து இயக்குநர் ராஜேஷ், "என்னுடைய முந்தைய படங்களில் இடம் பெற்ற டாஸ்மாக் காட்சிகள் ஏதும் இப்படத்தில் இருக்காது. என்னுடைய முந்தைய படங்களை போல் இப்படமும் 'யு' சான்றிதழ் படமாக இருக்கும். படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.