

தயாரிப்பில் இருக்கும்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ஒரு அறிமுக இயக்குனரின் படம். ஆனந்த விகடனில் செய்தியாளராக இணைந்து, பின்னர் அதே இதழில் வெளியாகி வாசர்களைக் கவர்ந்த ‘வட்டியும் முதலும்’ தொடர் மூலம் கவனத்துக்குரிய இளம் கட்டுரையாளராகவும் அடையாளம் காணப்பட்டிருக்கும் ராஜு முருகனின் ‘குக்கூ’தான் அந்தப் படம்.
‘‘நாளைக்கு காலைல 8 மணிக்கு திருவான்மியூர்ல முதல் ஷாட் எடுக்கணும். அதுக்கு எல்லாம் தயாரா இருங்க’’ என்று தன்னைவிட திடகாத்திரமாக இருந்த உதவியாளரை அண்ணாந்து பார்த்து உத்தரவிட்டபடி நம் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பித்தபோது, அவரது அலுவலக வளாகத்தில் இருந்த வேப்ப மரத்திலிருந்து ஒரு குயில் “குக்கூ” எனக் குரலெழுப்ப, “நல்ல சகுனம் பாஸ்” என்றபடி பேச ஆரம்பித்தார்...
“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்குள்ள வர்ற காதல் கதைதான். அந்தக் காதல் எப்படி வந்ததுச்சு, என்ன ஆகுதுனு அப்படினு சொல்லப்போறேன்.
பொதுவா இந்த மாதிரி கதைகள் வந்துச்சுனா, ரொம்ப இரக்கமா பார்ப்பாங்க. நாமாதான் அவங்கள ரொம்ப இரக்கமா பாக்குறோம். ஆனா, அவங்க சந்தோஷமாத்தான் இருக்காங்க. அந்த மகிழ்ச்சியை இப்படத்துல ரொம்ப இயல்பா பதிவு பண்ணிருக்கேன்” என்றவர் படத்துக்கு குக்கூ எனத் தலைப்பு வைத்தது ஏன் என்பதையும் விளக்கினார்.
“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் உலகமே சத்தங்களால நிறைஞ்சதுதான். 'குக்கூ' ஒரு குயிலோட சத்தம். ஆனால் நீங்க குயில அத்தனை சீக்கிரம் மரத்துல பார்த்துட முடியாது. நாம பாக்கணும் அப்படிங்குறதுக்காக குயில் சத்தம் கொடுக்குறதில்லை. அதுதான் இந்தப் படம். நாம பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைப் பாத்திருப்போம். ஆனா அவங்களோட வாழ்க்கைக்குள்ள போய் பாத்திருக்க மாட்டோம். அதைச் சொல்றதுனால 'குக்கூ' பேர் வைச்சேன்” என்று ஆச்சர்யம் ஊட்டும் ராஜு முருகன் பிரபல இயக்குனர் லிங்குசாமிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தவர்.
மென்மையான கதையைக் கேட்டதுமே வழக்கமான அந்தச் சந்தேகம் வந்தது. வணிகக் கணக்கோடுதான் ராஜு இந்தக் கதையைத் தேர்வு செய்தாரா?
“முதல் படத்துல ஒரு ஹிட் கொடுத்துடணும்னு யோசிச்சு, அந்த டைம்ல சினிமால என்ன டிரெண்ட் இருக்கோ, அதைத்தான் படமா பண்ணுவாங்க. அந்த மாதிரி எண்ணம் எனக்கு எப்பவுமே இருந்ததில்லை. ஊடகம் வேற வேறயா இருக்கலாம். ஆனால் நாம பார்க்குற வாழ்க்கையைத்தானே எடுக்க முடியும்? எது சரின்னு மனசு சொல்லுதோ அதைத்தானே எடுக்க முடியும்?” என்று சொன்னவர் மேலும் தொடர்ந்தார்.
“7 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர சந்திச்சேன். இந்தப் படம் அவரோட கதைதான். அவர் சொன்னப்போ இதைத்தான் படமா பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அதுக்கான நேரம் இப்பத்தான் அமைஞ்சிருக்கு” என்னும் ராஜு இந்தக் கதையை முதலில் கொண்டுபோனது இயக்குனர் ஷங்கரிடம்தானாம்.
“ஷங்கர் சார்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். ரொம்ப நல்லாயிருக்கு, கண்டிப்பா பண்ணலாம்னு சொன்னார். ஆனா 'ஐ' படம் தொடங்கிட்டதால அவரால பண்ண முடியாம போச்சு. இப்போ ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டியோஸ் தயாரிக்குறாங்க” என்று முகம் மலரும் ராஜு முருகன், தனது குக்கூ உலகின் கதாபாத்திரங்களை நமக்கு அறிமுகப்படுத்தினார்.
கதை நாயகன் பேர் தமிழ். அந்த கேரக்டருக்கு ரொம்ப தெரியாத ஆளா இல்லாம, கொஞ்சம் தெரிஞ்சவரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணுச்சு. ஒரு நடிகனா இருக்கணும், ஆனா பாத்தா நடிகனா தெரியக் கூடாது. அதான் தினேஷை முடிவு பண்ணினேன். ரொம்ப இயல்பா
‘அட்டகத்தி’ல நடிச்சிருந்தார். அந்த படத்துலயே அவரை பாத்தா ஒரு நடிகனாவே தெரியாது. அந்த கேரக்டரா உள்வாங்கி ரொம்ப சூப்பரா பண்ணிருந்தார். அதனாலதான் அவரை முடிவு பண்ணினேன்.
அவரை இப்போ மாத்தணுமே, உடனே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரை அணுகி, அவர் கூடவே இரண்டு மாசம் தினேஷை சுத்தச் சொல்லி, அவரோட மெனரிசங்கள் எல்லாத்தையும் உள்வாங்கிக்க சொல்லி முழுக்க மாத்தி கேரக்டரா வாழ வைச்சிருக்கேன்.
படத்தோட ஸ்டில்ஸ் பாக்குறீங்களே, அதுல தினேஷ் கண்ணை வேற மாதிரி வச்சுருக்கார் இல்லையா, அதுகூட அவரை பாலோ பண்ணித்தான் வச்சிருக்கார்.
இந்தப் படத்துக்கு நாயகி தேர்வுதான் ரொம்ப டைம் எடுத்துடுச்சி. வழக்கு எண் 18/9 படத்தோட மலையாள ரீமேக் பார்த்தேன். மாளவிகா மனசுக்குள் நிறைஞ்சார். அவர்தான் வேணும்னு பிடிவாதமாக கேட்டு வாங்கிட்டேன்” என்னும் ராஜு முருகன் அடிப்படையில் ஒரு கவிஞர். நல்ல எழுத்துக்கு சொந்தக்காரர். இப்படிப்பட்டவர் ஒரு சீரியஸான காதலைச் சொல்வதன் மூலம், நம்பிக்கை தரும் இளம் இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார் என்று நம்பலாம்.