முதல் பார்வை: நிசப்தம் - பொறுப்பான சினிமா!

முதல் பார்வை: நிசப்தம் - பொறுப்பான சினிமா!
Updated on
2 min read

பாலியல் வன்முறைக்கு உள்ளான 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஏற்படும் பாதிப்புகள், அதற்கான தீர்வுகளே 'நிசப்தம்'.

அஜய்- அபிநயா தம்பதியின் 8 வயது மகள் பேபி சாதன்யா. பெங்களூரில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார். ஒரு மழை நாளில் கையில் குடையுடன் பள்ளிக்கு செல்லும் சாதன்யாவிடம் ஒருவர் உதவி கேட்கிறார். அந்த உதவி அந்தக் குழந்தையை சிதைத்து விடுகிறது. அதிலிருந்து அந்தச் சிறுமி என்ன ஆனார், மீண்டு வந்தாரா? அதற்கான வழிகள் என்ன என்று திரைக்கதை விரிகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை அழுத்தமாகச் சொன்ன விதத்தில் இயக்குநர் மைக்கேல் அருண் கவனம் ஈர்க்கிறார். குழந்தைகள் நலன் சார்ந்த இயக்குநரின் நிஜமான அக்கறை பல இடங்களில் தென்படுகிறது.

பேபி சாதன்யாவுக்கு இது முக்கியமான படம். சிரிப்பது, அழுவது, கோபித்துக்கொள்வது, அடம் பிடிப்பது என குழந்தைக்கே உரிய குணநலன்கள் மட்டும் இக்கதாபாத்திரத்துக்கு போதுமானது அல்ல. அதை பேபி சாதன்யா புரிந்துகொண்டு பிரச்சினையின் தீவிரத்தையும், பாதிப்பையும் உள்வாங்கி நடித்திருக்கிறார். அப்பாவாகவே இருந்தாலும் அவர் ஆண் என்பதால் அவரையும் நெருங்கவிடாமல் செய்யும்போது நடிப்பால் அதிர வைக்கிறார். நான் ஏதாவது தப்பு பண்ணினேப்பா என கலங்கும் சாதன்யாவின் நடிப்பில் பக்குவம் தெரிகிறது.

ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தாலும் அதற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு பொறுப்பான அப்பாவை கண் முன் நிறுத்துகிறார் அஜய். மகளுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரமாக மாறி இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் கலங்க வைக்கிறார்.

உலகத்துல எத்தனையோ குழந்தைகள் இருக்கும்போது என் குழந்தைக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கணும்? என்ற சாதாரண அம்மாவின் மனநிலையைப் பிரதிபலிக்கிறார் அபிநயா. மகளுக்கு நடந்த கொடூரத்தை அறிந்து அழுகையும், ஆற்றாமையுமாக 'இதை என் ஃப்ரெண்ட் யார் கிட்டயாவது சொன்னா வாயைக் கிழிச்சுடுவேன்' என பொங்கி எழும் இடத்தில் அம்மாவாக மனதில் நிற்கிறார். இதைக் கடந்தும் அஜய்- அபிநயாவால் இன்னும் வலுவாக உணர்வுகளைக் கடத்தி இருக்க முடியும் என்பதையும் சொல்லியே ஆக வேண்டும்.

அஜய் நண்பராக வரும் பழனி, அவரது மனைவி ஹம்சா, போலீஸ் அதிகாரி கிஷோர், உளவியல் நிபுணர் ராது, வழக்கறிஞர் ஏ.வெங்கடேஷ், நீதிபதி ராமகிருஷ்ணா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ஷான் ஜாசீலின் இசையும், எஸ்.ஜே.ஸ்டாரின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. இலைகள் மீது நீரின் ஓசையும், அதற்குப் பிறகான நிசப்தத்தையும் ஷான் ஜாசீல் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார். நா.முத்துக்குமாரின் வரிகளில் மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே பாடல் மனதைக் கரைக்கிறது.

பாலியல் வன்கொடுமை, பாதிப்புகள், மீண்டு வருவதற்கான வழிமுறைகள், உளவியல் ரீதியான சிகிச்சை என்ற படிநிலைகளையும், சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது என்பதையும் இயக்குநர் மைக்கேல் அருண் பொறுப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுமியின் நிலையை உறுத்தாமல் பதிவு செய்திருக்கிறார். படத்தின் துவக்கக் காட்சிகளில் காதலோ, அன்போ சரியாக பதிவு செய்யப்படவில்லை. அபிநயா உள்ளிட்ட சில கதாபாத்திரங்களின் உதட்டசைவும், பின்னணிக் குரலும் சீராக இல்லை. முதிர்ச்சியான அணுகுமுறையும் இல்லை. இப்படி சில குறைகள் இருக்கவே செய்கின்றன.

'ஹோப்' என்ற கொரியன் படத்தை காப்பி அடித்துவிட்டு க்ரெடிட் தராமல் போங்காட்டம் ஆடுகிறார் இயக்குநர். ஆனால், படத்தின் உள்ளடக்கம் காலத்தின் தேவை கருதி 'நிசப்தம்' முக்கியமானதாக மாறுகிறது.

பரபரப்பான காலகட்டத்தில் குழந்தையை கவனிக்காத பெற்றோர், அப்பாவுக்கும் குழந்தைக்குமான இடைவெளியை உணர்த்திய விதம், பரபர தொலைக்காட்சிகளின் செய்திப் பசியை உரக்க சொன்ன முறை, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கை, காவல்துறை விசாரணை, குற்றவியல் சட்டத்தின் சாதக பாதகங்கள், மதுப்பழக்கத்தின் தீமை ஆகியவற்றை சொன்ன விதத்தில் 'நிசப்தம்' பொறுப்பான சினிமா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in