

1931 தொடங்கி 1980கள் வரை நாடகம் மற்றும் இலக்கியத்தின் தாக்கம் தமிழ் சினிமாவில் பெருமளவில் இருந்தது என சொல்லலாம். 1990கள் முதல், இந்த தாக்கம் குறைந்து, உலக சினிமாக்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது.
முதல் பேசும் படமான காளிதாஸ், காலம் காலமாகச் சொல்லப்பட்டு வந்த ஒரு நாடோடிக் கதை. அதன் பின் நிறைய திரைப்படங்கள், புராணம், ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் இதிகாசக் கதைகளை தழுவி எடுக்கப்பட்டவை. முதல் சமூகப் படமான மேனகா (1935), அதே பெயரில் வெளிவந்த வடூவூர் ராமசாமி ஜயங்காரின் நாவல். நாவல்களை படமாக்கும் முயற்சி இந்த படம் மூலம் தமிழில் தொடங்கியது. அதன் பின், எண்ணற்ற நாவல்கள் (ராஜாம்பாள், சந்திரகாந்தா, தியாக பூமி, மனோன்மணி, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, திகம்பர சாமியார், ஏழை படும் பாடு, தாய் உள்ளம், தேவதாஸ், திரும்பிப் பார், மலைக்கள்ளன், கள்வனின் காதலி, ரங்கூன் ராதா, புதையல், பாவை விளக்கு, யாருக்காக அழுதான், சித்தி, தில்லானா மோகனாம்பாள், காவல் தெய்வம், வெகுளிப்பெண், சொல்லத்தான் நினைக்கிறேன், பத்ரகாளி, புவனா ஒரு கேள்விகுறி, சில நேரங்களில் சில மனிதர்கள், ப்ரியா, முள்ளும் மலரும், உதிரிப் பூக்கள், நெஞ்சுக்கு நீதி, மூடுபனி, நதியைத் தேடி வந்த கடல், மெட்டி, நண்டு, சிறை, கோபுரங்கள் சாய்வதில்லை, ஒரு வீடு இரு வாசல், மறுபக்கம், சீவலப்பேரி பாண்டி, அழகி மற்றும் பல) திரைப்படமாக வெளிவந்து வெற்றி கண்டன.
1980கள் வரை இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு அதன் பிறகு படிப்படியாகக் குறைந்து இப்போது உறவே இல்லாத நிலையில் உள்ளது வருத்தப்பட வைக்கும் ஒரு மாற்றம். ஒருவரே மொத்த சினிமாவிற்கும் ஆதாரமாக இருக்க வேண்டும் என்ற அணுகுமுறைதான் பிறரின் படைப்புகளைத் திரைப்படமாக்கும் போக்கு குறைந்ததற்கு முக்கியக் காரணம். பிறர் கதைகளை எடுப்பதற்குப் பதில் இயக்குநர்களே கதைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர். இயக்குநர் பாலா, வசந்தபாலன் போன்ற சிலர் மட்டுமே இன்னமும் எழுதப்பட்ட படைப்புகளின் அடிப்படையில் படங்களை இயக்கிவருகிறார்கள்.
இன்றும் தமிழில் எண்ணற்ற நல்ல நாவல்கள் எழுதப்பட்டுவருகின்றன. தானே கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து, இயக்குநர்கள் அத்தகைய நல்ல நாவல்களை திரைப்படங்களாக்க முயற்சிக்கும் போது மேலும் நல்ல திரைப்படங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள மற்றொரு துறை நாடகம். தமிழ் சினிமாவின் அடிப்படை நாடகங்களே. தமிழின் சாதனைத் திரைப்படங்களாக நாம் பேசும் நிறைய படங்கள், முதலில் நாடகமாக உருவாக்கப்பட்டு அதன் பின் திரைப்படமாக எடுக்கப்பட்டன. 1931முதல் 1980கள்வரையிலான அரை நூற்றாண்டுக் காலம் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற நாடகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. ஒரு நல்ல கதை மக்களிடையே வரவேற்பு பெறுகிறதா என்பதை அறிய நாடகங்கள் பயன் தரும். அவை சிக்கனமும்கூட. ஆனால் நாடகத்துக்கான உழைப்பைக் கொடுக்க இன்று யாரும் தயாரில்லாததால், நாடகத்தின் தாக்கம் அருகிவிட்டது.
மக்களிடையே பெற்ற வரவேற்பின் அடிப்படையில் பல நாடகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு அப்படங்கள் வெற்றியும் கண்டன. காலவா, மேனகா, பவளக்கொடி, சந்திரகாந்தா, டம்பாச்சாரி, பதிபக்தி, மாத்ருபூமி, சகுந்தலை, ஹரிசந்திரா, சாவித்திரி, நாம் இருவர், வேலைக்காரி, மந்திரிகுமாரி, மணமகள், என் தங்கை, பராசக்தி, ரத்தக் கண்ணீர், தூக்கு தூக்கி, மனோகரா, கள்வனின் காதலி, சிவகங்கை சீமை, நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், எதிர் நீச்சல், இரு கோடுகள், வியட்நாம் வீடு, ஞான ஓளி, முகமது பின் துக்ளக், தங்கப்பதக்கம், ரிஷிமூலம், கல் தூண், மணல் கயிறு, ஓரு இந்திய கனவு, சம்சாரம் அது மின்சாரம், வேதம் புதிது போன்ற சில வெற்றிப் படங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். 1990 முதல் நாடகங்களுக்குத் தமிழ் சினிமாவில் எந்த வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. நாடகம் என்னும் துறையே முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப்போக்கு நல்ல நாடகங்கள் வருவதற்கும் குந்தகமாக உள்ளது என்று சொல்லலாம்.
தமிழில் நல்ல திரைப்படங்கள் மேலும் வர, இலக்கியப் படைப்புகளை நாடுவதும் நாடகங்களை ஆதரிப்பதும் அவசியம்.
(கோ. தனஞ்செயன், ஸ்டூடியோஸ் ஆஃப் டிஸ்னி-யு.டி.வி. மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தென்னக வணிகப் பிரிவின் தலைவர். இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள், அவரது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே.)