

திடீர் நெஞ்சு வலியால் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகை மனோரமாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
55 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையில் பயணித்துவரும் நடிகை மனோரமா (77), ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தவர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெயலலிதா, ரஜினி, கமல் ஆகிய முன்னணி நடிகர், நடிகைகள் பலருடன் நடித்தவர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த நடிகை மனோரமா, பின்னர் சில காலம் காரைக்குடியில் வசித்ததால் எல்லோராலும் அன்பாக ‘ஆச்சி’ என்று அழைக்கப்படுபவர்.
ஏற்கெனவே மூட்டுவலி பிரச்சினையால் சிரமப்பட்டு வந்த மனோரமாவுக்கு கடந்த ஞாயிற் றுக்கிழமை மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை யடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மனோரமாவின் உடல்நிலை குறித்து அவரது பேரன் மருத்துவர் ராஜராஜன் கூறியதாவது:
‘‘மனோரமா தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டுள்ளார். உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு இப்போது பரவாயில்லை’’ என்றார்.