

கமல் இயக்கி, நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு எப்போது என்பதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
கமல் இயக்கி நடித்து வரும் படம் 'சபாஷ் நாயுடு'. ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய படக்குழு, படப்பிடிப்பு முடிந்த காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கியது.
அப்பணியின் இடையே கமல் அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததால் படப்பிடிப்பு தடைப்பட்டது. சில மாதங்களுக்கு சிகிச்சை எடுக்க வேண்டும், மேலும் கமல் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதற்குப் பிறகு கமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை.
மேலும், 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார் கமல். 2017ம் ஆண்டு வெளியிடப்படும் என கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மீண்டும் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இது குறித்து படக்குழுவில் பணியாற்றி வருபவரிடம் விசாரித்த போது, "கண்டிப்பாக இப்போதைக்கு படப்பிடிப்பு தொடங்கப்படாது. ஏனென்றால் ஸ்ருதிஹாசன் முழுக்க 'சங்கமித்ரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் ஆகியோரும் பல்வேறு படங்களுக்கு தேதிகளை ஒதுக்கி நடித்து வருகிறார்கள்.
'விஸ்வரூபம் 2' பணிகளை முடித்துவிட்டு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார் கமல். அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளது. அனைவரது தேதிகள் ஒன்றாக எப்போது கிடைக்கிறதோ, அப்போது மட்டுமே படப்பிடிப்பு தொடங்க முடியும். கண்டிப்பாக 2017ம் ஆண்டில் 'சபாஷ் நாயுடு' வெளியாக வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் படம் 'சபாஷ் நாயுடு'. இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது லைகா நிறுவனம்.