

'நய்யாண்டி’ படத்தினை எனக்கு திரையிட்டு காட்டாவிட்டால் தடை செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார் படத்தின் நாயகி நஸ்ரியா.
'நய்யாண்டி' படத்தில் இடுப்பை அணைக்கும் காட்சிக்கு தனது அனுமதியின்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி, அதனை எனது முகத்துடன் இணைத்து போஸ்டர்களின் பயன்படுத்தி விட்டார்கள் என்று தனது பேஸ்ஃபுக்கில் தெரிவித்திருந்தார் நஸ்ரியா.
ஆனால் படக்குழு இவரது புகாருக்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ச்சியா பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து நஸ்ரியா இன்று காலை சென்னை கமிஷ்னர் அலுவலத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பது, “ கேரளாவில் பாரம்பரியமான முஸ்லீம் குடும்பத்தை சேர்த்த பெண் நான். தமிழ் மற்றும் மலையாளத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன்.
'நய்யாண்டி' படத்தின் டிரெய்லரை YOUTUBE இணையத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதில் இருக்கும் இடுப்பு தெரிவது போன்ற காட்சியில் நான் நடிக்கவில்லை. வேறு ஒரு நடிகையை வைத்து எடுத்து இணைத்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பின் போது அக்காட்சியில் நான் நடிக்க மறுத்துவிட்டேன். அக்காட்சி என்னோட குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு எதிரானது. அக்காட்சியில் நான் நடித்த போன்று காட்டியிருக்கிறார்கள், அது முற்றிலும் தவறானது.
இக்காட்சியினை பார்த்தவுடன் இயக்குநர் சற்குணத்தினை தொலைபேசியில் தொடர்புக் கொண்டேன். அவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார் மற்றும் என் மீது புகார் கொடுக்க போவதாகவும் மிரட்டினார். உடனே நான் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டேன். ஆனால் அவர் எனது தொலைபேசி அழைப்பிற்கு செவி சாய்க்கவில்லை.
படத்தினை இன்னும் நான் பார்க்கவில்லை என்பதால், இது போன்று நிறைய காட்சிகள் படத்திலும் இருக்குமோ என்ற பயம் இருக்கிறது. அக்டோபர் 11ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆகையால் படத்தினை எனக்கு போட்டிக் காட்டிவிட்டு திரையிடுமாறும், அவ்வாறு மறுத்தால் படத்திற்கு தடை விதிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே படத்தின் டிரெய்லரில் வரும் காட்சியின் மூலம் எனது ரசிகர்கள், குடும்பத்தினர் மத்தியில் எனக்கு புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.