பட விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுங்கள்: விமர்சகர்களுக்கு விஷால் கோரிக்கை

பட விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுங்கள்: விமர்சகர்களுக்கு விஷால் கோரிக்கை
Updated on
1 min read

ஒரு படத்தின் விமர்சனத்தை 3 நாட்கள் கழித்து வெளியிடுமாறு விமர்சகர்களுக்கு விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நெருப்புடா'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாவுள்ளார்.

'நெருப்புடா' இசை வெளியீட்டு விழா அன்னை இல்லத்தில் நடைபெற்றது. இதில் ரஜினி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், கார்த்தி, லாரன்ஸ், விவேக் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேசும் போது, "தீயணைப்பு வீரர்களைப் பற்றிய படங்கள் நிறைய பார்த்ததில்லை. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள். ஷான் ரோல்டன் இசை மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது.

பத்திரிகையாளர்கள் அனைவருமே திரையுலகில் ஓர் அங்கத்தினர் தான். தயவு செய்து உங்களுடைய பட விமர்சனங்களை 3 நாட்கள் கழித்துப் போடுங்கள். ஒரு படத்தின் 3 காட்சிகள் முடிவதற்குள், பட விமர்சனம் வந்து விடுகிறது. பத்திரிகையாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதை உணர்கிறேன்.

வெள்ளிக்கிழமை ஒரு படம் வெளியாகிறது என்றால், அப்படத்துக்கு சில நாட்கள் கொடுங்கள். விமர்சனத்தில் இது மக்களின் கருத்து என்று போடாதீர்கள். தினசரிகளில் விமர்சனத்துக்கு கீழே ஸ்டார்கள் எல்லாம் போடுவார்கள். அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

சில பத்திரிகையாளர்கள் சமூகவலைத்தளத்தில் படங்களை கிழித்தெறிகிறார்கள். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால், அதை 3 நாட்கள் கழித்து செய்யுங்கள்.

முதல் நாளே ஒரு படத்தின் விமர்சனத்தை எழுதினால், அதை தமிழ்நாட்டு மக்களே ஆதரிப்பது போன்று உள்ளது. இதை தயாரிப்பாளர் சங்கத் தலைவர், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், நடிகர், மனிதர் என்ற அடிப்படையில் கோரிக்கை வைக்கிறேன்" என்று பேசினார் விஷால்.

அவரைத் தொடர்ந்து பேசிய லாரன்ஸ், படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு "உடனே விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ரொம்ப வலிக்குது சார்" என்று விஷாலிடம் கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in