

'விஸ்வரூபம்' படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படாததை எண்ணி கவலையில்லை என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
மும்பையில் நடைபெற்ற ஜக்ரன் திரைப்பட விழாவில் கமலுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அவ்விழாவில் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பற்றி பேசியிருக்கிறார் கமல்ஹாசன்.
“இதுவரை என்னுடைய 7 படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கிடைக்கவில்லை. அதுபற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை.
நாம் அமெரிக்க சினிமாவில் நடிக்க வேண்டும், அல்லது சத்யஜித்ரே போல உலக சினிமாவிற்கு பங்களிக்க வேண்டும். இல்லையென்றால் நாம் அமெரிக்காவிற்கு ஊர்சுற்றிப் பார்க்க மட்டுமே சென்று வந்துக்கொண்டு இருப்போம்” என்று கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.
'விஸ்வரூபம்', 'தி லஞ்ச் பாக்ஸ்' என பல படங்களுக்கு மத்தியில் 'தி குட் ரோடு' என்ற குஜராத்தி மொழி திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.
தற்போது 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் கமல். இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளிவரக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.