இனம் டீஸருக்கு உதவிய சந்தோஷ் சிவன் மகன்

இனம் டீஸருக்கு உதவிய சந்தோஷ் சிவன் மகன்
Updated on
1 min read

'இனம்' டீஸரில் போர் சூழலில் விலங்குகள் என்ன செய்யும் என்பதை காட்டியிருப்பதற்கு தனது மகன் தான் காரணம் என்று சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் சிவன் தயாரித்து, இயக்கியிருக்கும் 'இனம்' படத்தினை தற்போது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து படத்தின் டீஸர் யூ-டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

போர் சூழலில் விலங்குகள் என்ன செய்யும் என்பதை அடிப்படையாக கொண்டு 'இனம்' டீஸர் வடிவமைக்கப்பட்டது. அதற்கு காரணம் ஒன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகன் தான் காரணம் என்று சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.

"ஒன்றாம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு மிருகங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். மீன்கள், பறவைகள் என வீட்டில் நிறைய வளர்த்து வருகிறார். ஒரு தீபாவளி தினத்தன்று, என்னை வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் சென்று பூச்சிகள் மற்றும் சிறு மிருகங்கள் எல்லாம் வெடிச்சத்ததிற்கு பயந்து எவ்வாறு மறைவிடம் தேடுகின்றன என்பதை காட்டினான்.

அச்சம்பவத்தினை அடிப்படையாக கொண்டே 'இனம்' டீஸர் வடிவமைக்கப்பட்டது. படத்தின் டீஸர் அனைத்து தரப்பு மக்களிடமும் வரவேற்பை பெற்றிருப்பது, சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இலங்கைப் போரின் போது அகதிகள் முகாமில் இருக்கும் இளைஞர்களிடையே நடைபெறும் கதையே 'இனம்' படம். இதில் சரிதா, கருணாஸ், கரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in