நடிகையை ஏமாற்றிய அதிபர் மீது போதை பொருள் கடத்தல் புகார்

நடிகையை ஏமாற்றிய அதிபர் மீது போதை பொருள் கடத்தல் புகார்
Updated on
1 min read

தொழில் அதிபர் பைசூல் மீது நடிகை ராதா புகார் கொடுத்திருந்த நிலையில், போதை பொருள் விற்பனையிலும் பைசூல் ஈடுபடுவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ராதா. இவர் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த வாரம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் ‘பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்பு வைத்திருந்ததாகவும், ரூ.50 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாகவும்' குறிப்பிட்டு இருந்தார். இந்த புகார் மீது வடபழனி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அக்ரம்கான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள் கிழமை ஒரு புகார் கொடுத்தார். அதில் ‘எங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பைசூலும், அவரது நண்பர் நிசாரும் சேர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி போதை பொருள் விற்க பயன்படுத்தி உள்ளனர்.

ராயப்பேட்டையை சேர்ந்த அக்பர் பாஷா என்ற இளைஞருக்கு தைவானில் வேலை வாங்கி தருவதாக கூறி, விசா, டிக்கெட், புதிய சிம் கார்டு, 900 அமெரிக்க டாலர் மற்றும் ஒரு பூந்தொட்டியை கொடுத்து அனுப்பியுள்ளனர். தைவான் விமான நிலையத்தில் அக்பர்பாஷாவை அதிகாரிகள் சோதனை செய்தபோது, பூந்தொட்டியில் 11 கிலோ கேட்டமைன் போதை பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து அவர் தைவானில் ஐந்தரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டு வந்திருக்கிறார்.

போதைப் பொருள் கடத்தல் தொழில் செய்து வரும் பைசூல், நிசார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து விளக்கம் கேட்க பைசூல், நிசாரை செல்போனில் தொடர்பு கொண்டபோது இருவரின் எண்களும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in