

திரையரங்க டிக்கெட் மீது 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட இருப்பதற்கு தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்று நாளிதழ்களை படித்தவுடன் திரையுலகை சேர்ந்தவனாகிய எனக்கு பயம் ஏற்பட்டது. திரையரங்குகளில் டிக்கெட் மீது உச்சகட்ட வரியான 28% GST வரி விதிக்கப்படுவது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதைக் கண்டு பயப்படுவதா, அல்லது கோபப்படுவதா என புரியவில்லை.
ஏற்கெனவே ஆன்லைன் திருட்டு, திருட்டு விசிடி, திருட்டுத்தனமாக கேபிள்களில் ஒளிப்பரப்படுவது திரையரங்கங்கள் இடிக்கப்படுவது என பல்வேறு ஆபத்துகளில் திரையுலகம் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கும் போது உச்சகட்ட வரியாக 28% GST என்ற பேராபத்து திரையுலகை அடியோடு சாய்க்கின்ற முயற்சியாகவே அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
திரையுலகிற்கு எந்த பாதுகாப்பும் வழங்காத மத்திய அரசு அதன் மீது உச்சகட்ட வரி விதித்துள்ளது. இது திரையுலகம் மீது பகைக்கொண்டு அதை வேரோடு மண்ணாக அழிக்கின்ற முயற்சியே என எண்ணத் தோன்றுகிறது. ஆன்லைன் பைரஸியிலிருந்து பாதுகாக்காத மத்திய அரசு திருட்டு விசிடிக்கு தண்டனை வழங்க சட்ட இயற்றாத மத்திய அரசு வரிவிதிக்கும் போது மட்டும் உச்சகட்ட வரி விதித்துள்ளது ஏன் என்று புரியவில்லை.
கோடான கோடி மக்களுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் வழங்கும் கலைத் துறைக்கு கவலையையும் துயரத்தையும் ஏன் மத்தீய அரசு பரிசீலிக்க விரும்புகிறது. அரசாங்கத்தின் இந்த முடிவை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
ஏதோ சினிமா என்றால் ரஜினி, கமல், ராஜமெளலி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் இவர்களைப் போல உயர்நிலையில் இருப்பவர்கள் நூற்றுக்கும் குறைவே ஆகும். தினம் தினம் வேலை செய்து பிழைப்பு நடத்தி வயிற்றுக்கும், வாய்க்கும் இடையே போராட்டத்தில் அல்லாடி கொண்டிருப்பவர்கள் 95% மேலானவர்கள் என்பதை அரசாங்கம் உணர வேண்டும். இது மேலோட்டமாக பார்க்கும் போது டிக்கெட் மீது தான் என்று மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையாக பாதிக்கப்படப் போ வது லட்சக்கணக்காண அன்றாடங்காட்சி தொழிலாளர்கள் தான்.
தமிழகத்தில் மட்டும் இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள் என 25,000-க்கும் மேற்பட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தினக்கூலி போன்ற தொழிலாளர்கள் எங்கள் சம்மேளனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், மாநிலம் முழுக்க திரையரங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் முதல் போஸ்டர் ஒட்டுபவர் வரை ஏறக்குறைய 5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் வாய்ப்பு பெறுகின்றனர்.
நாடு முழுக்க திரைப்படத் துறை மூலம் பதினைந்து லட்சம் பேர் நேரடியாகவும், 25 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஆக நாற்பதுலட்சம் பேர் வாழ்க்கையையும் பாதிக்கும் விதமாக இந்த வரிவிதிப்பு அமைந்துள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்தில் கொண்டு தொழிலாளர்கள் மேல் கனிவு காட்டவேண்டும் என வேண்டுகிறோம்.
இது ஒரு தொழிலா அல்லது கலையா? தற்போதைய நிலையில் திரைப்படத் துறை ஒரு தொழில் என்று எடுத்துக் கொல்ளமுடியாது அல்லது கலை என்று விட்டுவிட இயலாது. கலைத் தொழில் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். வரி விதிக்கும் போது தொழில் என்ற பார்வையும், கலை என்ற பரிவும் மத்திய அரசுக்கு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் பல்வேறு மன வேறுபாடுகளால் விஷால் தலைமையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், அபிராமி ராமநாதன் தலைமையில் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் தலைமையில் இன்னொரு அணி என மூன்று அணிகளாக பிரிந்து நம்மை நாமே பலவீனப் படுத்துக் கொள்ளக் கூடாது என தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். ஒன்றுபட்டு தமிழ்த் திரையுலகையும் நமது தொழிலாளர்களின் வாழ்க்கையையும் பாதுகாப்போம்" என்று தெரிவித்துள்ளார்.