

'ஃபோர்ப்ஸ் இந்தியா' இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ் நடிகர்களில், கமல் ஹாசன், விஜய்யை விட சூர்யா முன்னிலை முன்னிலை வகிக்கிறார். இவர்கள் மூவரையும் விட முன்னிலை வகித்திருக்கிறார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.
சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்தியப் பிரபலங்கள் பட்டியலை, ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது.
இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 16-வது இடத்தில் உள்ளார். ஓராண்டு காலத்தில் ரூ.50.57 கோடி ஈட்டியுள்ள இவர், வருவாய் தரவரிசையில் 16-வது இடத்திலும், மக்கள் மத்தியில் நிலவும் புகழ்ப் பட்டியலில் 24-வது இடத்திலும் உள்ளார்.
இப்பட்டியலில் 33-வது இடத்திலுள்ள நடிகர் சூர்யா, வருவாய்ப் பட்டியலில் 48.5 கோடி ரூபாயுடன் 17-வது இடத்திலும், புகழ்ப் பட்டியலில் 92-வது இடத்திலும் இருக்கிறார்.
நடிகர் கமல் ஹாசன் 47-வது இடத்தில் உள்ளார். இவர் ரூ.22.67 கோடியுடன் வருவாய் பட்டியலில் 29-வது இடத்திலும், புகழ்ப் பட்டியலில் 55-வது இடத்திலும் இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து, நடிகர் விஜய் 49-வது இடத்தில் இருக்கிறார். இவர், 32.5 கோடி ரூபாயுடன் வருவாய் பட்டியலில் 21-வது இடத்திலும், புகழ் பட்டியலில் 80-வது இடத்திலும் உள்ளார்.
ரூ.220.5 கோடி வருவாயுடன், நடிகர் ஷாரூக்கான் முதலிடத்தில் உள்ள இந்தப் பட்டியலில் நடிகர்கள் ரஜினிகாந்த், அஜீத் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.