போராட பிறந்தவன், போர்க்குணம் மிகுந்தவன் தம்பி விஷால்: தாணு புகழாரம்

போராட பிறந்தவன், போர்க்குணம் மிகுந்தவன் தம்பி விஷால்: தாணு புகழாரம்
Updated on
1 min read

போராட பிறந்தவன், போர்க்குணம் மிகுந்தவன் தம்பி விஷால் என்று தயாரிப்பாளர் தாணு புகழாரம் சூட்டினார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2017 - 2019-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அதிகாரியாகப் பொறுப்பேற்று இந்தத் தேர்தலை நடத்தினார்.

விஷால் தலைமையில் போட்டியிட்ட 'நம்ம அணி' பெருவாரியாக வெற்றி பெற்றது. புதிய நிர்வாகிகளின் பதிவியேற்பு விழா சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக விஷால் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ரஜினி பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தாணு பேசியது "தம்பிக்கு கவலை வேண்டாம். ஒட்டுமொத்த தமிழ் திரையுலகும் உங்களுடன் இருக்கும். 1896ம் ஆண்டு ஏத்தன்ஸ் நகரில் நவீன யுகத்தில் ஒலிம்பிக் போட்டி ஆரம்பித்த நாள் இன்று. எப்படி ஒலிம்பிக் தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்கிறதோ, தம்பி விஷாலின் தலைமையில் இருக்கக்கூடிய இந்த நிர்வாகம் மிக சீரும் சிறப்புமாக நெடுநாள் சிறப்பாக செயல்பட இறைவன் உங்களுக்கு துணையிருப்பார்.

மாற்றம் வேண்டும் என்று சொன்னீர். ஆம். யாரும் ஏமாற்றமடைய மாட்டார்கள். ஏற்றம் பெறுவார்கள். நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும், இயக்குநர் சங்கமும் ஒன்றிணைந்தால் தான் வெற்றிபெறும். அதற்கு அடித்தளமிட்ட தம்பி விஷாலுக்கு வாழ்த்துகள்.

போராட பிறந்தவன், போர்க்குணம் மிகுந்தவன் தம்பி விஷால். என்னுடைய வாழ்த்துகள்" என்று பேசினார் தாணு.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு போட்டியிட்ட போது விஷாலுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர் தாணு. அவர் நேற்றைய நிகழ்வில் விஷாலை பாராட்டியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in