

ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள 'கபாலி' படத்துக்கு 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், 'கபாலி' வெளியீடு தேதி குழப்பம் நீடித்து வந்தது. ஆனால், 'கபாலி' படக்குழுவோ படத்தின் தணிக்கை பணிகள் முடிவடைந்த உடன் தான் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறினர்.
இந்நிலையில், இன்று கபாலி படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கினர். இதனை படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர் தாணு ட்விட்டரில், ''152 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி'' என்று ட்வீட் செய்துள்ளார்.
கபாலி எப்போது வெளியாகும் என்பதை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.