

'இனிக்க இனிக்க' பாடலைப் பார்த்து நானில்லை டூப் என்று நஸ்ரியா சொல்லத் தயாரா என இயக்குநர் சற்குணம் கேள்வி.
'நய்யாண்டி' படத்தில் வரும் இடுப்பை அணைக்கும் காட்சி ஒன்றைத் தனது அனுமதியின்றி வேறு ஒரு பெண்ணை வைத்து படமாக்கி, அதனை இவரது முகத்துடன் இணைத்து போஸ்டர்களில் பயன்படுத்தி தன்னை தவறாக சித்தரித்து விட்டதாக நஸ்ரியா, 'நய்யாண்டி' படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் மற்றும் இயக்குநர் சற்குணம் மீது புகார் அளித்திருந்தார்.
இந்த புகாருக்கு தற்போது இயக்குநர் சற்குணம் அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பது :
“'நய்யாண்டி' திரைப்பட நாயகி நஸ்ரியா பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில், நய்யாண்டி படத்தில் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நஸ்ரியாவிற்கு பதில் வேறு பெண்ணை வைத்து முழுப்பாடலையும் எடுத்திருப்பதாகவும், டிரெய்லரில் ஒரு க்ளோஸ் அப் ஷாட்டில் டூப்பை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள்.
நான் ஏற்கனவே 'களவாணி', 'வாகை சூட வா' ஆகிய நல்ல தரமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்றுள்ளேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இனிக்க இனிக்க பாடலில் ஒரு இடத்தில் கூட நான் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாவைத் தவிர வேறு யாரும் இல்லை.
படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களைச் சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது. நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போகச் சொன்னேன்.
இதற்காக நான் கேரளாவில் இருந்து வர முடியாது வேறு யாரையாவது வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன நஸ்ரியாவிற்கு, இப்போது என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. ஒரு வேளை தன்னுடைய Marketing Publicity-காகக் கூட செய்திருக்கலாம்.
ஒரு வேளை நஸ்ரியாவிற்கு டிரெய்லரில் வரும் அந்த ஒரு க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால், அதை நான் நீக்கவும் தயார். ஆனால் இனிக்க இனிக்க பாடல் காட்சியில் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து அது நானில்லை.. டூப் என்று சொல்லத் தயாரா?
இந்த படத்திற்கு U Certificate கிடைத்திருக்கிறது என்பதை இந்த நேரத்தில் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். இது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க கூடிய FAMILY ENTERTAINING FILM.” என்று தெரிவித்துள்ளார்.
Related Link : நஸ்ரியா நடிக்கும் >திருமணம் என்கிற நிக்காஹ் ஆல்பம்
Related Link : >சடங்குகளை நாம் உதற முடியாது! : இயக்குநர் அனீஸ்