

ரயில் பயணியின் மர்ம மரணம், அது தொடர்பான சிபிசிஐடி அதிகாரியின் புலன் விசாரணையே 'சிவலிங்கா'.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்யும் சக்தி ஒரு ஆர்டர் எடுப்பதற்காக ரயிலில் வேலூருக்கு செல்கிறார். அப்போது மர்மமான முறையில் இறந்துவிடுகிறார். இது தற்கொலை அல்ல கொலைதான் என்று சக்தியின் காதலி போலீஸிடம் முறையிடுகிறார். இது குறித்து விசாரிக்கும் பொறுப்பு சிபிசிஐடி அதிகாரி லாரன்ஸிடம் ஒப்படைக்கப்படுகிறது. லாரன்ஸ் அந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார், எதைக் கண்டுபிடிக்கிறார், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், சவால்களும் என்ன என்பது மீதிக் கதை.
'சந்திரமுகி' போன்ற பேய் ஹிட் படங்களைத் தந்த பி.வாசு கன்னடத்தின் மறு உருவாக்கத்தை தமிழில் சிவலிங்காவாக தந்திருக்கிறார்.
புலன் விசாரணை செய்யும் அதிகாரி கதாபாத்திரத்தில் லாரன்ஸ் சரியாகப் பொருந்துகிறார். கோபம், விசாரிக்கும் விதம், உடல்மொழி என சரியாக கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். நடன அசைவுகள் ஒரே மாதிரியாக இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நான் ஒரு சிபிசிஐடி அதிகாரி, வெளியே சொல்லக்கூடாது என ரகசியமாக எத்தனை பேரிடம்தான் சொல்வார்?சின்ன கபாலி என்று பாடல் வரிகளில் லாரன்ஸை புகழ்ந்து தள்ளுகிறார்கள். ஏகப்பட்ட பில்டப்புகளுடனே லாரன்ஸ் படம் முழுக்க உலா வருகிறார். ஆனால், அந்த மாஸ் பில்டப் கதைக்கு பொருந்தாமல் உறுத்துகிறது.
ரித்திகா சிங்கின் மிகையான மேக்கப்பும், செயற்கையான நடிப்பும் ஒத்துழையாமை இயக்கமாக நகர்கிறது. சக்தி நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஊர்வசி சில இடங்களில் கவனிக்க வைக்கிறார்.
வந்துட்டாருய்யா வந்துட்டாரு என சொல்லும் அளவுக்கு வடிவேலு பின்னி எடுத்திருக்கிறார். உடல் மொழியும், வசன உச்சரிப்பும் நான் இன்னும் பழைய ஃபார்மில் இருக்கேன் என உணர்த்தும் விதமாக உள்ளது. பிரியாணி சாப்பிடும் காட்சியிலும், உருது அதுவா வருது என சொல்லும் போதும் தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது.
சந்தான பாரதி, ராதாரவி, மதுவந்தி, பானுப்ரியா, ஜெயப்பிரகாஷ், பிரதீப் ராவத் என பலர் இருந்தும் பெரிதாக பயன்படுத்தப்படவில்லை.
சர்வேஷ் முராரியின் ஒளிப்பதிவு கச்சிதம். தமனின் இசையில் ரங்கு ரக்கர பாடலும், சிவலிங்கா பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை படத்துடன் சரியாக ஒன்றவில்லை. சுரேஷ் அர்ஸின் கத்தரி அடிக்கடி ஜம்ப் ஆகிறது.
மர்ம மரணம், அதற்கு சாட்சியம் சொல்லும் புறா என சரியாக லைன் பிடித்திருக்கும் இயக்குநர் பி.வாசு திரைக்கதையில் எந்தவித புத்திசாலித்தனத்தையும், சாமர்த்தியத்தையும் புகுத்தவில்லை. கிளிஷே காட்சிகள், முந்தைய படங்களின் சாயல்கள் போன்றவை திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வழக்குக்கு சம்பந்தமான தகவல்களைக் கூறி ஆத்மாவை விரட்டப் பார்க்கும் லாரன்ஸ், அந்த ஆத்மா மூலம் விசாரணையை துரிதப்படுத்தி இருக்கலாமே, ஒரு வழக்கை துப்பறியும் அதிகாரியைக் கண்டு, அவரிடம் மர்ம மரணத்தின் காரணத்தைக் கேட்கும் ஆத்மா, அதற்குக் காரணமானவரைக் கண்டுபிடிக்க முடியாதா? வெறுமனே போட்டோ வைத்து பொருத்திப் பார்த்தே மர்ம மரணம் ஏன்? என யோசித்து பதில் சொல்வதும் போதுமானதாக இல்லை.
மொத்தத்தில் 'சிவலிங்கா' புத்திசாலித்தனம் இல்லாத, பயமுறுத்தாத ஆத்மாவின் கதையைச் சொல்லும் படமாக உள்ளது.