

'குற்றம் 23' படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் அருண்விஜய்.
அறிவழகன் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான 'குற்றம் 23' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் அருண்விஜய்.
இறுதியாக மகிழ்திருமேனி கூறிய கதை பிடித்துவிடவே, இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தை 'குற்றம் 23' படத்தை தயாரித்த இந்தர்குமார் தயாரிக்கவுள்ளார். அருண்விஜய் - மகிழ்திருமேனி இருவரது இணைப்பில் வெளியான 'தடையற தாக்க' படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இப்படத்துக்கான முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.