

இளையாராஜாவுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற சினேகனின் ஆவேசப் பேச்சுக்கு, அந்த மேடையிலேயே இளையராஜா பதிலளித்துள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா தயாரிப்பில் வேலு பிரபாரன் இயக்கியுள்ள படம் 'ஒரு இயக்குநரின் காதல் டைரி'. ஜூன் 2-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
'ஒரு இயக்குநரின் காதல் டைரி' படக்குழுவினரோடு இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் தாணு மற்றும் பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இளையராஜாவுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஆவேசமாகப் பேசினார் பாடலாசிரியர் சினேகன். அவருடைய பேச்ச்சில் இளையராஜா குறித்து, "முன்பொரு காலத்தில் தமிழ் இசை தொலைந்து போய்விடுமோ என்றொரு பயமிருந்தது. அப்போது தான் 'மச்சானைப் பார்த்தீங்களா' என்று ஒருவர் கிளம்பி வந்தார். நீ கருப்பனாய் பிறந்தது தவறு. குறைந்தபட்சம் ஒரு பல்கலைக்கழகம், சாலைக்குப் பெயர், பள்ளிக் கூடம் என பெயர் இருந்திருக்க வேண்டும். வாழும் கலைஞனுக்கு அங்கீகாரம் கொடுக்காத இந்த சமூகம் எங்களுக்குத் தேவையில்லை. இறந்த பிறகு பத்மபூஷன், பதம்விபூஷன் ஏன். அதெல்லாம் அடுப்பங்கறையில் கொண்டு போய் எரிக்க வேண்டும்.
ஒருவருடைய திறமை அங்கீகரிக்கப்படுவதில் பஞ்சமிருக்கிறது. ஏன் பாராட்டினால் குறைந்து போய் விடுவீர்களா?. இளையராஜா என்ன தீண்டத்தகாதவரா?. இந்த ஒட்டுமொத்த இசையையும் ஆக்கிரமித்திருக்கும் இளையராஜா திமிரோடு இருந்துவிட்டுப் போகட்டுமே. அதில் என்ன தவறு?
இவ்வளவு பெரிய மனிதரை, இப்படி ஓரங்கட்டி வைத்துள்ளார்களே என்று வேதனையாக உள்ளது. இசை ஒரு துளசி மாடத்தைச் சுற்றியே இருந்தது. இன்றைக்கு வயலில் சுற்ற விட்டுவிட்டார் மனிதர். யாருக்கு அந்த தைரியம் வரும். இசை என்பது ஒரு கூட்டுக்குள் கிடந்ததை, இன்றைக்கு தென்றல் மாதிரி ஆக்கியுள்ளாரே அந்த மனிதரைப் பற்றி விமர்சிக்க யாருக்கும் தகுதி கிடையாது" என்று ஆவேசமாகப் பேசிவிட்டு அமரச் சென்றார்.
அப்போது கையில் தயாராக வைத்திருந்த மைக்கில் இளையராஜா பதிலளித்துப் பேசும் போது, "வீதிக்கு நான்கு பள்ளிக்கூடங்கள் என் பெயரில் திறந்தால் போதுமா உனக்கு. உங்கள் மனதில், ரத்தத்தில், உயிரில் எப்போதுமே நிரந்தரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என் இசை. அதை விடுத்து மண்ணிலும், மரத்திலும் என் பெயரை எழுதி வைத்தால் நீண்ட காலம் நின்றுவிடுமோ. மக்கள் மனதிலிருப்பது இளையராஜா என்ற உயிர் ஒன்றுதான்" என்று தெரிவித்தார்.