

எப்போதுமே பணத்திற்காக படம் இயக்கும் ஆள் நானில்லை என்று 'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்.18-ஆம் நடைபெற்றது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் இசை மூலமாக ஈராஸ் நிறுவனம், தமிழ் திரையுலகின் இசையுலகில் கால் பதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியது, "'துப்பாக்கி' படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்த படம். அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சேரும் படம் என்பதால், நன்றாக வரவேண்டும் என்ற மன அழுத்தம் இருந்தது. ஆனால், அதை சந்தோஷமாக எடுத்துக் கொண்டேன்.
விஜய்யை வைத்து ஒரு வசனம் எழுதினால், அதை தனது நடிப்பு மூலம் ஒரு படி மேலே கொண்டுப் போய் விடுவார். 'துப்பாக்கி' இடைவெளி காட்சியில் நான் I AM WAITING என்று மட்டும் தான் எழுதினேன். அதை, தலையை கீழே இறக்கி ஏற்றி, I AM WAITING என்று சொன்ன விதம் தான், அந்த வசனத்தினை இன்று வரை பேசுகிறார்கள்.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு, நான் விஜய்யிடம் உங்களுக்கு 'துப்பாக்கி' ஜெகதீஷை பிடிக்குமா, 'கத்தி' ஜீவானந்தம் அல்லது கதிரேசனை பிடிக்குமா என்று கேட்டேன். அதற்கு விஜய், "எனக்கு 'துப்பாக்கி' ஜெகதீஷை விட கதிரேசனைத் தான் பிடிக்கும்" என்றார். அதில் இருந்தே தெரிந்துக் கொள்ளுங்கள், இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது என்று.
தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற நோக்கில், ஒரு புறம் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் டப்பிங், இன்னொரு பக்கம் எடிட்டிங், கிராபிக்ஸ் பணிகள் என அதிகமான பணிகள் காரணமாக படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டேன். எப்போதுமே ஆம்புலன்ஸ் போகக்கூடிய நிலைமை நமக்கு வரக்கூடாது என்று நினைத்தேன். அன்று ஆம்புலன்ஸில் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. என்னுடம் விஜய் சாரும் ஆம்புலன்ஸில் வந்தார்.
மருத்துவமனையில் என்னைத் தட்டி மருத்துவர், "இவர் யார் என்று தெரிகிறதா?" என்று கேட்டார். நான் அவர் காட்டிய பக்கம் தலையை திருப்பினேன், அங்கு விஜய் நின்றுக் கொண்டிருந்தார். உடனே மருத்துவரிடம், "இவரை தெரியாது என்று கூறினால், என் மகனே என்னை அடிப்பான் சார்." என்று கூறினேன். என்னுடன் முழுக்க இருந்து கவனித்துக் கொண்டார்.
நான் பணத்துக்காக இந்தியில் படம் எடுக்கச் செல்லவில்லை. சென்னைக்கு அப்பால் உள்ள ஊரில் இருந்து வரும் ஒருவனால் இந்தியில் சாதிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக தான் படம் எடுக்கச் சென்றேன். இந்தி, தெலுங்கில் நான் படம் இயக்கினால் எனக்கு தமிழ் படம் இயக்குவதை விட சம்பளம் அதிகம். நானும் விஜய்யும் பணத்திற்காக படம் எடுக்கவில்லை. நானும் பச்சை தமிழன் தான். எனக்கும் தமிழ் உணர்வு இருக்கு." என்றார்.