

தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜுனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியானது. ஆனால், அச்செய்தி குறித்து இருவருமே தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. தற்போது விரைவில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது.
சமந்தாவின் பெயரைக் குறிப்பிடாமல் நாகார்ஜுன் " எனக்கும் அமலாவுக்கும் சைதன்யா குறித்து மிகவும் மகிழ்ச்சி. அவனுக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒருவரைத் தேடி கண்டிப்பிடித்திருக்கிறான். இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
நாகார்ஜுனின் இந்த அறிவிப்பால் சமந்தா - நாக சைதன்யா திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.