இமைக்கா நொடிகள் படத்தை ஒப்புக் கொண்டது ஏன்?- இயக்குநர் அனுராக் கஷ்யாப்

இமைக்கா நொடிகள் படத்தை ஒப்புக் கொண்டது ஏன்?- இயக்குநர் அனுராக் கஷ்யாப்
Updated on
1 min read

'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப் விளக்கம் அளித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'இமைக்கா நொடிகள்'. 'ருத்ரா' என்ற வில்லன் வேடத்தில் நடித்து, இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாவுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர் அனுராக் கஷ்யாப்.

கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'ஹிப் ஹாப் தமிழா' இசையமைத்து வருகிறார். சென்னை மற்றும் பெங்களூருவில் சில முக்கியமான காட்சிகளை காட்சிப்படுத்தி முடித்துள்ளது படக்குழு.

முதன் முறையாக 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லன் வேடம் குறித்து இயக்குநர் அனுராக் கஷ்யாப் பேசியுள்ளார்.

அதில், "இப்படத்தில் நடிப்பதற்கு முக்கிய காரணம், என்னுடைய ருத்ரா கதாபாத்திரம் தான். வழக்கமாக இருக்கும் வில்லன்கள் போல் குடி, சிகரெட், அடியாட்களை ஏவிவிடுவது என்று இல்லாமல், புத்திசாலித்தனமாகவும் அதே நேரத்தில் தந்திரமாகவும் செயல்படக்கூடிய ஒரு மிரட்டலான வில்லனாக நடித்துள்ளேன்.

மும்பையில் நான் என்னுடைய பிற வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், இந்த வித்தியாசமான குணாதியசங்களை கொண்ட ருத்ரா கதாபாத்திரம் என்னை இப்படத்தில் நடிக்க வைத்தது. எனது கதாபாத்திரம் ரசிகர்களின் சிறிதளவு பயத்தை வெளிக்கொண்டு வந்து விட்டால், நான் செய்த பணி முழுமை பெற்று இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வேன்.

இளைஞர்கள் இது போன்ற சுவாரசியமான கதையம்சங்களை கொண்டு படம் எடுப்பதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது. இத்தகைய வலுவான கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதற்கு நிச்சயமாக அதிக அனுபவம் தேவை.

ஆனால் அஜய் ஞானமுத்து அந்தப் பணியை கன கச்சிதமாக செய்து வருவதை பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கின்றது. என்னை நானே திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் அனுராக் கஷ்யாப்.

3 கட்ட படப்பிடிப்பு முடிவுற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதத்துக்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in