

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படம், வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடித்தார். யோகி பாபு, சதீஷ், ரோபோ சங்கர், ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
‘Mr. லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்துக்கு ‘ஹீரோ’ எனத் தலைப்பு வைத்து, கடந்த மார்ச் 13-ம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் இவானா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அர்ஜுன், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இந்தப் படம் வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, அவர்களும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினர். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017-ம் ஆண்டு ரிலீஸான ‘வேலைக்காரன்’ படமும் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.
‘ஹீரோ’ என்ற தலைப்பில், விஜய் தேவரகொண்டாவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் அண்ணாமலை இயக்கும் இந்தப் படம், தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது.