

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ராஜா என்றும், நான் ஒரு மந்திரி என்று இசையமைப்பாளர் அனிருத் கருத்து தெரிவித்துள்ளார்.
அனிருத் இசையில் வெளியாகும் இருக்கும் 'கத்தி' படத்தின் பாடல்கள் ஐ-டியூன்ஸில் முதல் இடத்தினை பிடித்திருக்கிறது. அனிருத்தின் முந்தைய படங்கள் போலவே 'கத்தி' படமும் ஐ-டியூன்ஸில் முதல் இடத்தில் பிடித்திருப்பதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அனிருத். மாலை 6 மணிக்கு பேசலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. உங்களது கேள்விகளுக்காக காத்திருக்கிறேன் என்று புகைப்படத்தோடு பதிவிட்டார்.
தொடர்ச்சியாக கேள்விகள் வந்துக்கொண்டே இருக்க, ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அனிருத் பதிலளித்தார். அவரது பதில்களின் தொகுப்பு:
"ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ராஜா. நான் ஒரு மந்திரி மட்டுமே. அவரது இசையோடு என்னுடைய இசையை ஒப்பீடு செய்வது சரியல்ல. அவருடைய ரசிகர்களில் ஒருவனாக இதனை கூறுகிறேன்.
எனக்கு பிடித்தமான பெண் கிடைக்கும் போது திருமணம் செய்துகொள்வேன். தற்போதைக்கு எனது இசை தான் எனக்கு பெண் தோழியாக இருக்கிறது.
ரஜினிகாந்த் மற்றும் அஜித் படங்களின் பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
'வேலையில்லா பட்டதாரி' படத்தின் பின்னணி இசையினை 100வது நாள் விழாவில் வெளியிடும் திட்டம் இருக்கிறது. ஆனால், இன்னும் எதுவும் முடிவு செய்யவில்லை.
எனது இசையில் அடுத்ததாக 'காக்கி சட்டை' தயாராகி வருகிறது. விரைவில் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கிறேன்" என்று பதிலளித்துள்ளார் அனிருத்.