

ஓய்வுபெற்ற பேராசிரியர் பிரகாஷ்ராஜ் தன் மகன் விக்ரம் பிரபுவுடன் வாழ்ந்து வருகிறார். மறைந்துபோன மனைவியின் நினைவுகளும், தன் மகனின் எதிர்காலமும்தான் உலகம் என்று வாழும் அவர், படிப்படியாக நினைவுகள் அற்றுப் போகும் ‘அல்சீமர்’ நோயால் பாதிக்கப்படுகிறார். தான் யார்? எங்கு இருக்கிறோம்? சில நொடிகளுக்கு முன்பு என்ன செய்தோம் என்பதுகூட தெரியாத குழந்தையாகிப் போகிறார். சாஃப்ட்வேர் பணியில் இருக்கும் விக்ரம் பிரபு, பதவி உயர்வு காரணமாக மும்பை செல்ல நேரிடுகிறது. அல்சீமர் நோயாளிகளுக்கான சிறப்பு காப்பகத்தில் தந்தையை சேர்த்துவிட்டு மும்பை செல்கிறார். ஒரு கட்டத்தில், அங்கிருந்து காணாமல்போகும் பிரகாஷ்ராஜ், கொலையாளியான சமுத்திரக்கனியிடம் சிக்குகிறார். சமுத்திரக்கனி போலீஸிடம் இருந்து தப்பிப்பதற்காக குமரவேல் - மதுமிதா குடும்பத்தை மிரட்டி, அவர் களது வீட்டில் பிரகாஷ்ராஜுடன் தஞ்சம் அடைகிறார். இதற்கிடையில், மருத்துவ ரான இந்துஜாவுடன் சேர்ந்து அப்பா பிரகாஷ்ராஜை தேடி அலைகிறார் விக்ரம் பிரபு. அந்த ‘60 வயது மாநிறம்’ உள்ள முதியவர் பிரகாஷ்ராஜ், மகனுடன் சேர்ந்தாரா என்பதை அன்பின் வழி நின்று சொல்கிறது அழகான திரைக்கதை.
கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘கோதி பன்னா சாதாரண மைக்கட்டு’ (கோதுமை நிறம்... சராசரி உடல்வாகு) படத்தை தமிழில் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ராதா மோகன். கன்னடத்தில் நடிகர் அனந்த்நாக் ஏற்ற முதியவர் பாத்திரத்தை, பிரகாஷ்ராஜ் ஏற்றுள்ளார். வெள்ளந்தியான சிரிப்பு, தளர் நடை,
கண்களில் தெரியும் சாந்தம், அலட்டாத உடல்மொழி என வெளுத்துக் கட்டு கிறார். அல்சீமர் நோயாளியாக மிகை இல்லாமல் நடிக்கிறார்.
தந்தையை தேடித் திரியும் தனயனாக விக்ரம் பிரபு. கோபம் வந்து குமுறு வதும், அன்பில் கலந்து உருகுவதுமாக பக்குவமான நடிப்பைத் தருகிறார். தந்தை யின் அன்பை அலட்சியப்படுத்திவிட்டு, அவர் தொலைந்துபோன பிறகு அவரை நினைத்து புலம்புவது, கவலையோடு தேடி அலைவது என சிறப்பான பங் களிப்பை அளித்துள்ளார். மருத்துவராக வரும் நாயகி இந்துஜாவின் நடிப்பும் சிறப்பு.
மனிதநேயம், செஞ்சோற்றுக் கடன் இரண்டுக்கும் நடுவில் தவிக்கும் கொலை யாளியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. ராதா மோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல், மதுமிதாவுடன் சேர்ந்து ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். சமுத்திரக்கனியின் கையாளாக வருபவரும் சுவாரசியம் கூட்டுகிறார்.
அன்பை சுமந்தபடி, அந்த கணத்தில் மட்டும் வாழும் பெரியவரின் கதைக்கு நடுவே, கிளைக்கதையாய் மெல்லிய நீரோடையாய் பரவுகிறது விக்ரம் பிரபு -
இந்துஜா காதல். படத்தில் எந்த காட்சி யிலும் அதிகப்படியான சினிமாத்தனங் கள் இல்லை. அதேநேரம், பிரகாஷ்ராஜை விக்ரம் பிரபு தேடும் படலத்தை மையப்
படுத்தியே படம் முழுவதும் காட்சிகள் நகர்கிறது. கூடவே, காட்சிகளில் இல்லாமல், வசனங்களிலேயே அன்பை போதிப்பதால் ஒருகட்டத்தில் பார்வை
யாளர்களுக்கு லேசான அயர்ச்சி ஏற் படுகிறது. இருப்பினும், கிளைமாக்ஸ் காட்சிகளில் அதை சரிக்கட்டி விடுகின்றனர்.
காப்பகத்தில் வரும் மரியா - ஜானி பாத்திரங்கள், பிரகாஷ்ராஜ் சொல்லும் வெள்ளை - கருப்பு நாய் கதை, தந்தையின் காதலை தனயனிடம் இந்துஜா சொல்லும் கவித்துவமான காட்சிகள் பாராட்டுக்குரியவை.
விஜியின் வசனங்கள், விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு, பெரும் பக்க பலமாக இளையராஜாவின் இசை என்று அழகாக பயணிக்கிறது படம். எளிதான காட்சி அமைப்புகள் இதை எல்லோருக்குமான படமாக ஆக்கியிருக்கிறது. ‘அன்பே உலகம்' என்பதை அழகாகச் சொல்கிறது ‘60 வயது மாநிறம்’.