

தமிழ் சினிமாவிற்கு சிறந்த பத்து இளம் இசையமைப்பாளர்கள் தேவை என்று இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
'வெயில்', 'அங்காடி தெரு', 'அரவான்' போன்ற எதார்த்தமான படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். தற்போது சித்தார்த், ப்ருத்விராஜ் நடிக்கும் 'காவியத்தலைவன்' படத்தினை இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஃபேஸ்புக்கில் தீவிரமாக இயங்கும் இயக்குநர் வசந்தபாலன், " யாருடைய இசை இப்போது உங்களுக்கு அடுத்த தலைமுறையின் இசையாக உள்ளது? யாருடைய பாணி புதியதாக இளமையாக உள்ளது? யார் நீண்ட காலத்திற்கு நீடிப்பார்கள்? யாரும் கேலியான பதிலைப் பதிய வேண்டாம், ஆரோக்கியமான உங்கள் அனுமானங்கள் வரவேற்கப்படகின்றன." என்று இசையமைப்பாளர்கள் பற்றி பதிவிட்டார். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, " நண்பர்களே! உங்களின் அடுத்த தலைமுறை இசையமைப்பாளராக யாரை நீங்கள் கருதுகிறீர்கள் என்ற என் நிலைத்தகவலுக்கு கிட்டத்தட்ட 205 எதிர்வினைகள் வந்துள்ளன. வந்த எதிர்வினைகளில் பெரும்பான்மையான ஓட்டு அனிருத்துக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் விழுந்துள்ளது. இருந்தாலும் தமிழ் சினிமா இசையில் இன்னும் வெற்றிடம் உள்ளது. இன்னும் கடுமையான போட்டி வேணும். பத்து நல்ல சிறந்த இளம் இசையமைப்பாளர்கள் தேவை. பத்து hans zimmer தேவை. அப்போது தமிழ்த்திரையுலகம் ஒரு இசையமைப்பாளரையே நம்பிக் கொண்டிருக்க தேவையில்லை. நிறைய சாய்ஸ் இருக்கும். இசையமைப்பாளருக்காக வருடக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. இசை சீக்கிரம் கையில் வந்து விட்டால் படம் உருவாக்குவதில் பல மெனக்கெடல் செய்யலாம்.
நிறைய புதிய இசையமைப்பாளர்கள் வரும் போது தான் இசையமைப்பாளர்களை கடவுளாய் பார்க்கும் மனோபாவம் ஒழியும். இந்தியில் இளம் புதிய இசையமைப்பாளர்கள் குவிகிறார்கள் அது போன்று இங்கும் இளம் இசையமைப்பாளர்கள் தேவை. என் சத்துக்கு நான் இரண்டு புது இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டேன். ஜி.வி. பிரகாஷ் / கார்த்திக்" என்று பதிவிட்டுள்ளார்.