கத்தி படத்தை யாருக்கும் தரமாட்டோம்: தயாரிப்பாளர் திட்டவட்டம்

கத்தி படத்தை யாருக்கும் தரமாட்டோம்: தயாரிப்பாளர் திட்டவட்டம்
Updated on
1 min read

'கத்தி' படத்தை யாருக்கும் தரமாட்டோம் என்று லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னையில் கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கத்தி' படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். செப்.18-ஆம் தேதி 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

லைக்கா நிறுவனத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர், இலங்கையில் தொழில் செய்து வருகிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிக்கை ஒன்றை விளக்கமாக அளித்தது. ஆனால், தொடர்ச்சியாக 'கத்தி' படத்துக்கான எதிர்ப்புகள் வலுத்த நிலையில், லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா செவ்வாய்க்கிழமை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே நடந்த அந்தச் சந்திப்பில் சுபாஸ்கரன் பேசியது:

"எங்களுக்கு எந்த ஓர் அரசியல் பின்னணியும் கிடையாது. மக்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கிறது. எங்களை மட்டுமே அனுமதிக்கவில்லை.

எங்களுக்கு எதிராக இருப்பது தொழில்முறை போட்டி. இப்படத்திற்கு எதிராக இருப்பவர்களிடம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.

'கத்தி' தொடர்பான சினிமா பிரச்சினைக்கு ஏன் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும்? என்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் 'கத்தி' படத்தின் தயாரிப்பு செலவு.

'கத்தி' படத்தைத் தொடர்ந்து பல்வேறு தமிழ்ப் படங்களை தயாரிக்க இருக்கிறோம். விரைவில் இந்தி மற்றும் ஏன் ஹாலிவுட்டில்கூட படங்களை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். இப்படம் குறித்து விஜய் என்னிடம் எதுவும் கருத்து கூறவில்லை. படத்தில் வேண்டுமானால் கருத்து கூறியிருப்பார்.

ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுக்கு 3 பில்லியன் யூரோ அளவிற்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுக்கு ஏன் ராஜபக்ச பண உதவி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. 'கத்தி' படத்தை யாருக்கும் கொடுத்துவிடும் எண்ணமில்லை" என்று கூறினார்.

மேலும், 'கத்தி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in