கரகாட்டக்காரன் பட்ஜெட்; எவ்ளோ செலவாச்சு தெரியுமா?’’ - கங்கைஅமரன் ஃப்ளாஷ்பேக்

கரகாட்டக்காரன் பட்ஜெட்; எவ்ளோ செலவாச்சு தெரியுமா?’’
- கங்கைஅமரன் ஃப்ளாஷ்பேக்
Updated on
1 min read

’’கரகாட்டக்காரன் படம் ரிலீசாகி 30 வருடங்களாகிவிட்டன. இன்றைக்கும் படத்தை ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எவ்ளோ பட்ஜெட் தெரியுமா? எவ்வளவு செலவில் இந்தப் படத்தை எடுத்தோம் தெரியுமா?’’ என்று கங்கை அமரன் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

ராமராஜன், கனகா நடித்து, இளையராஜா இசையமைத்து, கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 1989ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி ரிலீசானது. படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக, ரிப்பீடட் ஆடியன்ஸின் கைத்தட்டி, ஆரவாரித்துக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். பல ஊர்களில் 200 நாட்களைக் கடந்தும் மதுரை முதலான ஊர்களில் 350 நாட்களைக் கடந்தும் ஓடிய இந்தப் படம், தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று.

இந்தப் படம் வெளியாகி, 30 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், படத்தின் இயக்குநர் கங்கை அமரன், தி இந்து தமிழ் திசைக்காக, பிரத்தியேக வீடியோ பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

’கரகாட்டக்காரன்’ என்று சொன்னதும் என்னவெல்லாமோ ஞாபகம் வருகிறது. எல்லாமே பசுமையாய் நினைவில் இருக்கிறது. இன்றைக்கும் கூட ‘கரகாட்டக்காரன்’ படத்தை டிவியில் ஒளிபரப்பினால், அப்படியே உட்கார்ந்துவிடுகிறார்கள். சேனல் மாற்றாமல் பார்க்கிறார்கள். எனக்கு நிறைய பேர் போன் செய்து, படம் பற்றி சொல்லுகிறார்கள். 30 வருடங்கள் கழித்தும் இப்படிக் கொண்டாடக்கூடிய படமாக ‘கரகாட்டக்காரன்’ இருப்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. ஒரு படைப்பாளிக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

‘கரகாட்டக்காரன்’ படத்தை எடுப்பதற்கு, 18லேருந்து 20 லட்சம் ரூபாய்தான் செலவானதாக ஞாபகம். இதுதான் மொத்தப் படத்துக்குமான செலவு. ஆனால், மிகப்பெரிய வசூலை விநியோகஸ்தர்களுக்குக் கொடுத்தது.

உண்மையில், இந்தப் படத்துக்கு முன்னால், ‘அண்ணனுக்கு ஜே’ படம் இயக்கினேன். அது சரியாகப் போகவில்லை. அதனால், ‘கரகாட்டக்காரன்’ பெரிய விலைக்கு வாங்கவில்லை.

அதுமட்டுமா? படத்தைப் பார்த்துவிட்டு, ‘படம் நல்லாருக்கு. பாட்டெல்லாம் நல்லாருக்கு. காமெடியும் சூப்பரா இருக்கு. ஆனா பெரிய வசூல் கொடுக்குமானு தெரியலை’ன்னுதான் விநியோகஸ்தர்கள் சொன்னாங்க. ஆனால், ரிலீசான நாள்லேருந்து 200 நாள், 250 நாள் வரை தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடிக்கொண்டிருந்தது. விநியோகஸ்தர்கள் கணக்குப் போட்டிருந்த வசூலையெல்லாம் தாண்டி, அஞ்சு மடங்கு, ஏழு மடங்கு வசூலைக் கொடுத்தது ‘கரகாட்டக்காரன்’.

ஒரு படத்துக்கு என்னென்ன தேவையோ அது எல்லாமே இந்தப் படத்தில் இருந்துச்சு. எல்லாத்தையும் விட முக்கியமா, படத்தின் இவ்ளோ பெரிய வெற்றிக்கு ஒரேகாரணம்... இளையராஜாதான்!

இவ்வாறு கங்கை அமரன் தெரிவித்தார்.

இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை வீடியோ பேட்டியில் தந்திருக்கிறார் கங்கை அமரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in