

ஆளுநரைச் சந்தித்தது ஏன் என்று சங்கரதாஸ் சுவாமிகள் அணி விளக்கம் அளித்துள்ளது.
ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி நிலவி வந்தது. திடீரென்று தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டார். உறுப்பினர்கள் சேர்க்கை, பதவி மாற்றம், தகுதி நீக்கம் ஆகிய குளறுபடிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பாண்டவர் அணி மற்றும் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரண்டு தரப்புக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று (ஜூன் 19) பதிவாளர் அறிவிப்புக்கு முன்பாக, பாண்டவர் அணியினர் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துப் பேசினர். அப்போது, தேர்தலுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது.
பாண்டவர் அணியினர் தமிழக ஆளுநரைச் சந்தித்ததைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 20) சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். பாக்யராஜ் பேசும் போது, “பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்தார்கள். ஆகையால், நாங்களும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து அதையே வலியுறுத்தினோம்.
இந்தத் தேர்தல் நான் சம்பந்தப்பட்ட தேர்தல் அல்ல. இரண்டு அணி பக்கமும் நான் இல்லை. பதிவாளர் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் ஆளுநர் தெரிந்து வைத்துள்ளார். நீதிமன்றத்துக்குச் சென்று முடிவாகி, தேர்தல் நடைபெறும் பட்சத்தில் வாருங்கள் பாதுகாப்பு தருகிறோம் என்று சொன்னார்” எனத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் பேசும் போது “ஆளுநர் தெளிவாக இது தமிழக அரசு சம்பந்தப்பட்டது என்று கூறிவிட்டார். பதிவாளருடைய நோட்டீஸுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தேர்தலுக்குப் பாதுகாப்பு கொடுப்பது மட்டுமே என் கையில் உள்ளது. மற்றபடி வேறு எந்தவொரு சம்பந்தமும் இல்லை என ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முதல்வரைச் சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளோம். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் இன்னும் நேரம் கொடுக்கவில்லை. அவரைச் சந்தித்து மனு அளிக்கவுள்ளேன். ஆளுநர் எவ்வளவு முக்கியமானவர். அவரைச் சந்தித்து அவரது நேரத்தை பாண்டவர் அணியினர் வீணடித்துவிட்டார்கள். நாங்களும் சந்திக்கவில்லை என்றால், தவறு செய்ததாக ஆகிவிடுமோ என்று மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்தோம்” என்று தெரிவித்துள்ளார் ஐசரி கணேஷ்.