‘பிக் பாஸ் 3’ வீட்டில் இருந்து அகற்றப்பட்ட ரஜினி ஓவியம்

‘பிக் பாஸ் 3’ வீட்டில் இருந்து அகற்றப்பட்ட ரஜினி ஓவியம்
Updated on
1 min read

‘பிக் பாஸ் 3’ வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 3-வது சீஸன், நேற்று (ஜூன் 23) முதல் தொடங்கியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, மூன்றாவது முறையாகவும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். ஃபாத்திமா பாபு, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, கவின், அபிராமி, சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், ஷெரின், மோகன் வைத்யா, தர்ஷன், சாண்டி, முகென் ராவ், ரேஷ்மா ஆகிய 15 பேரும் போட்டியாளர்களாகக் களமிறங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு சீஸன்களைவிட, இந்த சீஸனில் ‘பிக் பாஸ்’ வீடு மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பண்பாடு, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள் என ‘பிக் பாஸ்’ வீடே வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.

அதில், ‘விருமாண்டி’ கமலின் பாதி முகமும் இடம்பெற்றுள்ளது. இதேபோல், ரஜினியின் ‘பேட்ட’ ஓவியமும் ‘பிக் பாஸ்’ வீட்டில் இடம்பெற்றிருக்கிறது.

வழக்கமாக, ஒவ்வொரு ‘பிக் பாஸ்’ சீஸன் தொடங்குவதற்கு முன்பும், சில நாட்களுக்கு முன்பாக பத்திரிகையாளர்களை அழைத்துக்கொண்டு போய் ‘பிக் பாஸ்’ வீட்டில் ஒருநாள் தங்கவைப்பார்கள். இம்முறையும் அதேபோல் சில பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்று தங்கவைத்தனர்.

பத்திரிகையாளர்கள் தங்கியபோது இடம்பெற்றிருந்த ‘பேட்ட’ ரஜினி ஓவியம், நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின்போது இல்லை. எனவே, பத்திரிகையாளர்கள் தங்கிச்சென்ற பின்னர் ரஜினி ஓவியம் அகற்றப்பட்டிருப்பதாக அங்கு சென்றுவந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், முதல் சீஸனில் ஆரவ்வும், இரண்டாவது சீஸனில் ரித்விகாவும் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in