

‘’கிரேஸி மோகனுக்கு முன்னாடியே தெரிஞ்சிருச்சு’’ என்று இயக்குநர் எஸ்.பி.காந்தன், கண்ணீருடன் உருக்கமாகத் தெரிவித்தார்.
கிரேஸி மோகன் சமீபத்தில் காலமானார். இவரின் நாடகங்களை நடிகரும் இயக்குநருமான மெளலியின் சகோதரர் எஸ்.பி.காந்தன் இயக்கி வந்தார்.
கிரேஸி மோகன் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
‘’’கிரேஸி கிரியேஷன்ஸ்’ நாடகக் குழு தொடங்கி 40 வருடங்களாகிவிட்டன. எங்கள் நட்புக்கு அதை விட வயது அதிகம். நான் பியூசியில் சேர்ந்த போது, அங்கே மாது பாலாஜி சேர்ந்தார். அந்த சமயத்தில், என் அண்ணா மெளலி, நாடகங்களில் புகழ் பெற்று விளங்கினார். இதனால் எனக்கும் பாலாஜிக்கும் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து பாலாஜி வீட்டுக்குச் செல்லும் போது, அவனுடைய அண்ணா கிரேஸி மோகனின் நட்பு கிடைத்தது. அப்போது அவர் எஞ்சினியரிங் படித்துக்கொண்டிருந்தார்.
சேர்ந்து சினிமா, டிராமா, ஹோட்டல் என்று சுற்றுவோம். மோகன், பாலாஜி, நான் என மூவருமே வயசு வித்தியாசமெல்லாம் இல்லாமல், அரட்டையடிப்போம்.
அந்த சமயத்தில், மெளலி சினிமாவுக்கு வந்தார். வரிசையாகப் படங்கள் பண்ணினார். அவரின் படங்களுக்கு டைட்டிலில் இடம்பெறாத உதவி இயக்குநராக எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
இதேபோல, கிரேஸி மோகனும் எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி என பலருக்கும் நாடகம் எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில், ‘ஏன் நாமளே ஒரு டிராமாக் கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது’ என்கிற யோசனை வந்தது. அப்படி ஆரம்பித்ததுதான் இந்தக் கூட்டணி. மோகன் ஸ்கிரிப்ட் எழுதுவான். பாலாஜி நடிப்பான். நான் டைரக்ட் பண்றதுன்னு முடிவாச்சு.
தூர்தர்ஷன்ல கிரேஸி மோகனுக்கு டிராமாவுக்கு டைம் கொடுத்தாங்க. அந்த சமயத்துல யார் டைரக்டர்னு முடிவு பண்ணல. முதல் நாள், என்னென்ன பண்ணனும், கேமிரா எப்படி வரணும், ஷாட் எப்படிலாம் வைச்சுக்கலாம்னு நான் சொன்னேன். அன்னிக்கி நைட் ஷூட்டிங் முடிஞ்சு, ராத்திரி பத்து மணிக்கு, ஸ்கூட்டர்ல மோகனும் நானும் வந்துட்டிருந்தோம். அப்ப மோகன், ‘டேய் காந்தா, இந்த சீரியலுக்கு டைரக்ஷன்னு உம்பேரைப் போட்ரு’’ன்னான். ‘இல்லடா. கதை திரைக்கதை வசனம் இயக்கம்னு உம்பேர் போடலாம். எம் பேரை கோ டைரக்டர் மாதிரி எதுனாப் போட்டுக்கலாம்’னு சொன்னேன். ஆனா மோகன் கேக்கலை. என்னை டைரக்டராக்கினது கிரேஸி மோகன் தான்!
30 பக்க டிராமாவுக்கு 300 பக்கம் எழுதித்தருவான். ‘என்னடா நீ... எடிட் பண்றதே பெரிய வேலையா இருக்கும் போலவே’ன்னு அலுத்துக்குவேன். ஆனா, அந்த 300 பக்கம் எழுதினதை வியந்து பாப்பேன்.
ஒரு குழந்தை மாதிரிதான் கிரேஸி மோகன். அவன் தான் டிராமா எழுதியிருப்பான். எல்லாம் முடிஞ்சு, ரிகர்சல் பாக்கும் போது, ‘பரவாயில்லியே... டிராமா சூப்பரா வந்திருக்குப்பா’ன்னு சொல்லுவான். இப்போ... அப்படிலாம் உற்சாகமாப் பேசுற அந்தக் குரல் இல்ல. தடக்குதடக்குன்னு போன் போடுற மோகன் இல்ல.
முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சிருச்சு. அவன் இறந்த தேதில, நாங்க எல்லாருமே வெளிநாட்ல இருந்திருக்கவேண்டியது. ‘நான் வரலை. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க. நான் வந்தா உங்களுக்குத்தான் சிரமம்’னு கிரேஸி சொன்னான். ’நீ வரலேன்னா, நாங்களும் போகலடா’ன்னு சொல்லிட்டான் பாலாஜி. ஆக, வெளிநாட்டு டிராமாவை கேன்சல் பண்ணியாச்சு.
இப்போ யோசிச்சுப் பாத்தா, மோகன் வராம, நாங்க மட்டும் போயிருந்தாலும் சிரமம். அவனும் வந்திருந்தாலும் சிரமம். பேச்சு, எழுத்து, ஓவியம், காமெடி, வெண்பான்னு ஏராளமான விஷயங்கள் கிரேஸி மோகன்கிட்ட இருந்தாலும், அவன்கிட்ட தெய்வீகம் இருந்துச்சு. ஆன்மிகம் இருந்துச்சு. அதுதான் முன் கூட்டியே இப்படிச் சொல்லவைச்சிருக்கு. அதாவது முன்னாடியே அவனுக்கு தெரிஞ்சிருக்கு!’’
என்று சொல்லிவிட்டு குலுங்கி அழும் காந்தனைத் தேற்ற வார்த்தைகளில்லை.