

‘கொலையுதிர் காலம்’ படக்குழுவினருக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான பிரச்சினையில் சமரசம் ஏற்பட்டுள்ளது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார். எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் இந்தி வெர்ஷனான ‘காமோஷி’ படத்தில், நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா, பூமிகா நடித்துள்ளனர். வருகிற 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘கொலையுதிர் காலம்’ படத்தை வாழ்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதில், “ ‘கொலையுதிர் காலம்’ படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைப்பெற நான் மனதார வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் படத்தைப் பார்த்தேன். இது ஒரு முழுமையான படம், இந்த த்ரில்லர் படம், ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த சீசனில் அனைவரும் விரும்பும் ஜானராக த்ரில்லர் இருப்பதால், இந்தப் படம் அதற்கேற்ற வரவேற்பைப் பெறும். நயன்தாரா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் சக்ரி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு, தொழில்நுட்ப ரீதியிலும் கதையிலும் சிறப்பான படமாக இதைக் கொண்டு வந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, தயாரிப்பாளர் மதியழகன் இந்தத் திரைப்படத்தின் மீது வைத்துள்ள ஈடுபாடு மற்றும் அக்கறையைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தை மிகச்சிறப்பாக வெளியிட அவர் எடுக்கும் முயற்சி, நல்ல கதையம்சம் உள்ள படங்களின் மீது அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டைக் காட்டுகிறது.
இதற்கு முன்பு சில கசப்பான தருணங்கள் எங்களுக்குள் நிகழ்ந்தன. அவை, துரதிருஷ்டவசமானவை மற்றும் தேவையற்றவை. இறுதியில், ஒரு நல்ல உரையாடல், அவைகளை நேர்மறையான நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.
நாங்கள் அனைவரும் திரைப்படத் தொழிலில் இருக்கிறோம். நன்மதிப்பும், நேர்மறையான சிந்தனைகளும் எங்களைச் சுற்றிப் பரவுவதுதான் நல்லது. ‘கொலையுதிர் காலம்’, பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப்பெற நான் மனதார வாழ்த்துகிறேன். முக்கியமாக, மதியழகன் தன்னம்பிக்கைக்காக. எப்போதுமே நல்ல கதையம்சம் உள்ள படங்களை ஆதரிக்கும் ரசிகர்கள், இந்தப் படத்தையும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
முன்னதாக, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார் ராதாரவி. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்துகளில், “இந்தப் படத்தைத் தயாரிப்பாளரும் இயக்குநரும் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றே நினைத்தேன். சற்றும் பொருத்தமற்ற நிகழ்ச்சி. தேவையற்ற நபர்கள் கலந்துகொண்டு, என்ன பேசுகிறோம் என்று தெரியாமலயே பேசினர்” என்று குறிப்பிட்டார்.
இதனால், படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகவும், விக்னேஷ் சிவன் மீது சக்ரி டோலட்டி வழக்கு தொடர முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது ‘கொலையுதிர் காலம்’ படக்குழுவினருக்கும், விக்னேஷ் சிவனுக்கு இடையில் சமரசம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.