

நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித்திடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு முடிவுகள், கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், 59 ஆயிரத்து 785 தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கே.ஸ்ருதி, அகில இந்திய அளவில் 57-வது இடம் பிடித்தார்.
அதேசமயம், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மோனிஷா ஆகிய மூவரும் போதிய மதிப்பெண்கள் பெறாததால் தற்கொலை செய்து கொண்டனர்.
முன்னதாக, ‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற அனிதா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது மூன்று மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ‘நீட்’ குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், “நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போது ரிதுஸ்ரீ, வைஷ்யா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு, நீட் என்ற கொள்கையை சட்டமாகக் கொண்டிருக்கும் மத்திய அரசு, அதைத் தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நாம்... இவர்கள்தான் இதை நிகழ்த்தியவர்கள்!” எனத் தெரிவித்தார்.
அவரின் ட்வீட்டை ரீட்வீட் செய்த நடிகை காயத்ரி ரகுராம், “ஒரு படம் தோல்வியடைந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ள நினைப்பீர்களா? இல்லை, அடுத்த படத்தை நன்றாகச் செய்ய முயற்சிப்பீர்களா? அல்லது படங்களைத் தடைசெய்ய வேண்டும் என்று போராடுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.