

இது விசித்திரமானது துரதிர்ஷ்டமானது. இது நடந்திருக்கக் கூடாது என்று நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது தொடர்பாக ரஜினி தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைத்த சங்கங்களின் பதிவாளர் உத்தரவை ரத்து செய்யக்கோரி விஷால் தொடர்ந்த வழக்கில் தேர்தலை திட்டமிட்டபடி நாளை (ஜூன் 23) நடத்தலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 2019- 2022ம் ஆண்டுக்காக நடிகர் சங்கத் தேர்தல் நாளை (ஜூன் 23) மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் எப்பாஸ் பள்ளியில் நடைபெறவுள்ளது.
நேரில் வந்து வாக்களிக்க முடியாதாவர்கள் தபால் வாக்குகள் மூலம் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வாக்குகள் அனைத்துமே இன்று (ஜூன் 22) மாலை 6 மணிக்குள் அனுப்பியிருக்க வேண்டும்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால், ரஜினியால் நேரில் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், ரஜினிக்கு தபாலில் வாக்களிக்க வாக்கு சீட்டு தபாலி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், காலதாமதமாக கிடைத்ததால் அவரால் தபால் வாக்கு மூலமாகவும் வாக்களிக்க முடியவில்லை.
இது தொடர்பாக ரஜினி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நான் தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன். நடிகர் சங்கத் தேர்தலுக்கான தபால் வாக்களிப்புச் சீட்டை நான் எவ்வளவு முயன்றும் முன்கூட்டியே பெற முடியாமல் மாலை 6.45 மணிக்குத்தான் பெற்றேன். இந்தத் தாமதத்தினால் நடிகர் சங்கத் தேர்தலில் என்னால் வாக்களிக்க முடியாததற்காக வருந்துகிறேன். இது விசித்திரமானது துரதிர்ஷ்டமானது. இது நடந்திருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.