

'காமோஷி' படத்தின் தோல்வியால், 'கொலையுதிர் காலம்' படத்தின் வசூல் பாதிக்கப்படுமோ என்ற தயக்கத்தில் இருக்கிறது படக்குழு.
சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை முதலில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்தார். மேலும், இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தார். பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டு பொறுப்புகளிலிருந்தும் விலகினார். தற்போது எட்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் படத்தைத் தயாரித்துள்ளார்.
ஜூன் 14-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், தலைப்புப் பிரச்சினையில் சிக்கியதால் அன்றைய தினத்தில் வெளியாகவில்லை. அதே தேதியில் இதே படத்தின் இந்திப் பதிப்பான 'காமோஷி' வெளியானது. அதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் தமன்னா நடித்தார். பிரபுதேவா, பூமிகா ஆகியோரும் நடித்தனர்.
இந்நிலையில் 'காமோஷி' திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. சமீபத்திய படங்களில் வசூல் ரீதியாக மிகக் குறைவான வசூலையே எடுத்துள்ளது. இதன் பாதிப்பு தமிழ்ப் பதிப்பான 'கொலையுதிர் காலம்' படத்தில் எதிரொலிக்குமா என்று படக்குழுவினர் தயக்கத்தில் உள்ளனர்.
நயன்தாரா நடித்திருப்பதால் பாதிப்பு இருக்காது என்றும், 'காமோஷி' படத்தின் வசூலை விட இங்கு வசூல் அதிகமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கருதுகிறார்கள். தற்போது, 'கொலையுதிர் காலம்' தலைப்புப் பிரச்சினையை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.