சென்னை தண்ணீர் பிரச்சினை: களமிறங்கிய தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு

சென்னை தண்ணீர் பிரச்சினை: களமிறங்கிய தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சு
Updated on
1 min read

சென்னையின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க உதவுமாறு நடிகர் மனோஜ் மஞ்சு தெலுங்கு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பருவமழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. குடிநீரை வழங்கிய நீராதாரங்களான ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வற்றிவிட்டன.

இதனால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் மக்கள் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குடிநீர் தேவையைச் சமாளிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து மக்கள் தண்ணீர் லாரிகளுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மனோக் மஞ்சு சென்னையின் குடிநீர் தேவையைத் தீர்க்குமாறு தெலுங்கு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மனோஜ் மஞ்சு கூறுகையில், ''தெலுங்கு மக்களுக்கு தேவைப்பட்டபோது உணவு, தண்ணீர், உறைவிடம், கொடுத்தது சென்னை. இப்போது நம்முடைய முறை. நாட்டின் ஆறாவது பெரிய நகரம் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. நானும் என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் நான் வளர்ந்த பகுதிகளுக்குத் தண்ணீர் வழங்க இருக்கிறோம். உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய அனைவரையும் வேண்டிக் கேட்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தவித்தபோது நடிகர் மனோஜ் மஞ்சு ஏராளமான உதவிகளைச் செய்தார். இவர் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in