

'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தைத் தயாரிக்கிறார். இதை 'அருவி' இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ளார்.
'கனா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார்.
கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய இப்படத்துக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனத் தலைப்பிடப்பட்டது. இதில் 'விஜய் டிவி' ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 3) நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தன் பேச்சில், தனது அடுத்த தயாரிப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் அந்தப் படத்தை 'அருவி' இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
அருண்பிரபு படம் தொடர்பாக சிவகார்த்திகேயன் கூறுகையில், “முழுக்க புதுமுகங்கள் மட்டுமே நடிக்கிறார்கள். அதன் பணிகள் தொடங்கிவிட்டன. என் நண்பர்களோடு பணிபுரிந்துவிட்டேன். இப்போது என் தம்பியுடன் பணிபுரிவதில் கூடுதல் சந்தோஷம். ரொம்ப பெருமையாக எனக்கு இப்படியொரு தம்பி இருக்கிறார் என சொல்லிக் கொள்வேன்” என்று பேசினார்.
சிவகார்த்திகேயனின் உறவினர் அருண்பிரபு என்பது நினைவுகூரத்தக்கது.
'அருவி' படத்துக்குப் பிறகு, 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தைத் தொடங்கினார் அருண்பிரபு புருஷோத்தமன். ஆனால் தயாரிப்பு நிறுவனம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியுள்ளதால், அந்தப் படம் கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. ஆகையால், சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அருண்பிரபு.