திரை விமர்சனம் - தும்பா

திரை விமர்சனம் - தும்பா
Updated on
2 min read

கேரள வனப் பகுதியில் இருந்து ‘தும்பா’ என்ற தாய்ப் புலி தனது குட்டியுடன் வழி தவறி, ஆனை மலை புலிகள் காப்பகத்தின் டாப்சிலிப் பகுதிக்கு வந்துவிடுகிறது. அதை தேடிக் கண்டுபிடிக்க தமிழக, கேரள வனத் துறையினர் முகாமிடுகின்றனர். கதாநாய கன் தர்ஷன், அவரது நண்பன் தீனா ஆகிய இருவரும் வனத்துறையின் பெயின் டிங் வேலைக்காக இப்பகுதிக்கு வரு கின்றனர். புலியை படம்பிடிக்கும் ஆர் வத்தோடு, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி, கேமரா சகிதமாக வந்துசேர்கிறார் ‘வைல்டு லைஃப்’ புகைப்படக் கலைஞ ரான கதாநாயகி கீர்த்தி பாண்டியன். வந்த இடத்தில் தர்ஷன், தீனாவுடன் அவருக்கு நட்பு மலர்கிறது. இதற்கிடை யில், வழிதவறிய புலியைத் தேடிப் பிடித்து ஆதாயம் அடைய நினைக்கும் ஒரு மோசமான வனத்துறை அதிகாரி யால் இவர்கள் 3 பேருக்கும் பிரச்சினை கள் முளைக்கின்றன. இவர்களுக்கு வனத்துறை அதிகாரி ஏன் தலைவலி தருகிறார்? மனிதர்களை வனவிலங்கு கள் எப்படி எதிர்கொள்கின்றன? புலியை கீர்த்தி படம்பிடித்தாரா? வனத்துறை ஆட்களிடம் தாய்ப் புலி சிக்கியதா? இந்த கேள்விகளுக்கு பதிலாக அமை கிறது திரைக்கதை.

வன விலங்குகள், அதிலும் குறிப் பாக அழிந்துவரும் தேசிய விலங்கான புலியைப் பாதுகாப்பது நம் அனை வரின் முக்கிய கடமை என்ற கருத்தை சுமந்துள்ள திரைப்படம். அந்த நோக் கத்தை திரைக்கதை வழியே சரியாக கடத்திக் கொண்டுபோக முயற்சித்திருக் கிறார் இயக்குநர் ஹரீஷ் ராம். வன வளத்தைப் பாதுகாப்பதில் அப்பகுதி மக்களுக்கு இருக்கும் அக்கறை சில அதிகாரிகளுக்கு இல்லை என்பதையும் படம் சுட்டிக் காட்டுகிறது.

டாப்சிலிப் மலைப்பகுதியின் அழகு, அங்கு வசிக்கும் மக்களின் நம்பிக்கை, வன அதிகாரியின் அதிகாரம் என யதார்த்த வாழ்வியலின் பின்னணியில் கதை நகர்கிறது. படத்தில் வெகுளியாக வரும் தர்ஷனின் பயம், நண்பன் தீனாவின் குறும்புத்தனம் ஆகியவை சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. கவுன்ட்டர் காமெடி என்ற பெயரில் தீனா தொடர்ச்சியாக வெளிப்படுத்தும் வனக் காட்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் நீள்வது சலிப்பு. விலங்குகளை வேட்டையாடத் திட்டமிடும் அதிகாரியை தண்டிக்க, அப்பகுதி மக்களின் உதவி யோடு கீர்த்தி பாண்டியன் குழு முன்னெடுக்கும் நிகழ்வுகள் சிறப்பு.

புலியை வேட்டையாடத் துடிப்பது, அதன் அழிவுக்கு யார் காரணம் என ஒரே நேர்க்கோட்டில் பயணிக்காமல் காட்டெருமை, குரங்கு, அணில் உள் ளிட்ட விலங்குகளையும் சூழ்ந்து படம் நகர்வதால் குழந்தைகளை வெகுவாக ஈர்க்கிறது.

விலங்குகள் துன்புறுத்தப்படக் கூடாது என்பதால், கிராஃபிக்ஸ் தொழில் நுட்பம்தான் இதுபோன்ற படங்களுக்கு பிரதானம். இதில் பெரிதாக சறுக்கி யிருக்கிறது ‘தும்பா’. படத்தில் புலி உள்ளிட்ட அனைத்து விலங்குகளின் கிராஃபிக்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ் தரம், 2டி பொம்மைப் படம் அளவுக்கே இருக்கின்றன. இதனால், கம்ப்யூட்டரில் உருவாக்கிய 3டி விலங்குகள், மனிதக் கதாபாத்திரங்களுடன் சுத்தமாக ஒட்ட வில்லை. அதனால் பார்வையாளர்கள் மனதிலும் ஒட்டாமல் போகின்றன.

கீர்த்தி பாண்டியன் ஒரு பூனையை அணுகி புகைப்படம் எடுப்பதுபோல வனத்தில் புலியை நெருங்குவது நம்பும் படி இல்லை.

கானகத்தை கதைக்களமாக கொண்ட படத்துக்கு பிரம்மாண்டமான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் நரேன் இளன். கதையின் போக்குக்கு ஏற்ற இசையை அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி கூட்டணி வழங்கியுள்ளது.

ஜெயம் ரவி கவுரவத் தோற்றத்தில் வந்து, புலி பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்வதும், காட்டில் வாழும் ஆதிகுடிகள் - கானுயிர்கள் இடையே காணப்படும் பிரிக்கமுடியாத பந்தத்தை எடுத்துச் சொன்னதும் படத்தில் மலிந் திருக்கும் குறைகளை மீறி மனதில் பதி கின்றன. கிராஃபிக்ஸ் புலியின் வடி வமைப்பில் இன்னும் நுணுக்கம், வனத்தில் சிக்கித் தவிக்கும் தர்ஷன் - தீனாவின் காட்சிகளில் சற்று சுவா ரஸ்யம், புலியைப் பிடிக்க வன அதிகாரி செயல்படுத்தும் திட்டங்களில் புதுமை போன்றவற்றில் கச்சிதமாக மெனக் கிட்டிருந்தால் குழந்தைகளை மட்டு மல்லாமல் அனைத்து தரப்பினரையும் ‘தும்பா’ ஈர்த்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in