புல்லுருவியைப் புடுங்கி எறிய வேண்டியது நமது கடமை: இயக்குநர் பாரதிராஜா

புல்லுருவியைப் புடுங்கி எறிய வேண்டியது நமது கடமை: இயக்குநர் பாரதிராஜா
Updated on
1 min read

தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள புல்லுருவியைப் புடுங்கி எறிய வேண்டியது நமது கடமை என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு, வருடந்தோறும் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து கல்வி உதவித்தொகை வழங்குவார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தனி அதிகாரி வந்துவிட்டதால், அவர்களால் வழங்க இயலவில்லை. இந்த ஆண்டு, நலிந்த தயாரிப்பாளர்களின் 26 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தேவைப்பட்டது. இதற்கு ஒட்டுமொத்தமாக 5 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. ‘அந்தத் தொகையை நான் தருகிறேன்’ என்று நடிகர் சங்கத் தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் போட்டியிடும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒப்புக்கொண்டார்.

அந்தப் பணத்தை, விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், தயாரிப்பாளர்கள் கேயார், சத்யஜோதி தியாகராஜன், முரளிதரன், டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது:

“சமீபகாலமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகச் சீர்குலைவு நடந்துள்ளது. சுமார் 7 வருடங்களாக எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தேன். இவ்வளவு பெரிய ஆட்கள் எல்லாம் இருக்கும்போது, எப்படி ஒரு பெருச்சாளி உள்ளே வந்தது. கஷ்டப்பட்டு சேர்த்துவைத்த வைப்புநிதி ரூ. 7 கோடிக்கும் மேல் இருந்தது. அது இல்லாமல்போய், ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால், ஒன்றுமே இல்லாத சூழலில் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. ரொம்ப அவமான விஷயம் அது. அந்தப் புல்லுருவியைப் புடுங்கி எறிய வேண்டியது நமது கடமை. அதை அப்படியே விட்டால், வேறு மாதிரி வளர்ந்து அனைத்தையும் கெடுத்துவிடும்.

யாருக்கு என்ன உதவி என்றாலும், உடனே செய்யக்கூடியவர் ஐசரி கணேஷ். அதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும். தயாரிப்பாளர் சங்கம் பண்ண வேண்டியதை, ஒரு தனி மனிதன் பண்ணுகிறான். எழுத்தாளர் சங்கத்தில் பாக்யராஜ் இருக்கும்போது, நியாயத்துக்காகப் போராடி ஜெயித்தவன். நடிகர் சங்கம் சரியான செயல்பாட்டுக்கு வர வேண்டுமென்றால், பாக்யராஜ் அணிக்கு வாக்களிக்க வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தை, தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாற்ற வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை பாண்டவர் அணி பண்ணவில்லை. நாங்கள் தென்னிந்திய இயக்குநர் சங்கத்தை, தமிழ்நாடு இயக்குநர் சங்கம் எனப் பெயர் மாற்றிவிட்டோம். பாக்யராஜ் தலைமையிலான அணி இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று, தமிழ்நாடு நடிகர் சங்கம் எனப் பெயர் மாறும் என்று நம்புகிறேன்.”

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா பேசினார். இந்த விழாவில் கலந்துகொண்ட அனைத்து தயாரிப்பாளர்களுமே விஷாலைக் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in