’’பிரிவுக்கு காரணமும் காதல்தான்!’’ - பார்த்திபன் நெகிழ்ச்சி

’’பிரிவுக்கு காரணமும் காதல்தான்!’’ - பார்த்திபன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

’’பிரிவுக்குக் காரணம் கூட காதல்தான்’’ என்று தன் பர்சனல் விஷயத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் பார்த்திபன்.

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனியார் இணையதளச் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், நடிகராக இருந்து, உடன் நடித்த நடிகையைக் கல்யாணம் செய்துகொண்டு, பிறகு பிரிவது என்பது உங்கள் விஷயத்திலும் நடந்திருக்கிறது. நீங்கள் பரந்த மனம் கொண்டவர். எதையும் ஆழமாக சிந்திக்கக் கூடியவர். ஆனாலும் உங்களுக்கு இது நிகழ்ந்திருக்கிறதே... என்கிற கேள்விக்கு பார்த்திபன் பதிலளித்ததாவது:

என்னைப் பொருத்தவரைக்கும், அதீத காதல் கூட பிரியலாமே எனும் எண்ணத்தைக் கொடுத்துவிடும். இங்கே பெற்றோர் பார்த்து வைத்த கல்யாணத்தில், எமோஷனல், சென்டிமென்ட் விஷயங்கள் என்பதெல்லாம் இல்லை. ஏதேனும் பிணக்கு என்றால், ‘நீங்கதானே பாத்து கல்யாணம் பண்ணி வைச்சீங்க?’ என்று சொல்லிவிடலாம். ஆனால் காதல் திருமணம் என்பது அப்படியல்ல. முழுக்க முழுக்க, எமோஷனல் கொண்டது. சென்டிமென்டுகள் நிறைந்தது.

நேற்று நான் ஒரு விஷயம் செய்தேன். செய்யும்போது சரி என்று நினைத்தேன். இப்போது விடிந்ததும் அது தவறு என்று தோன்றுகிறது. நான் செய்த விஷயம், சரியாகவும் பிறகு தப்பாகவும் உணருகிற போது, அடுத்தவரின் மன உணர்வுகள் எப்படியெல்லாம் மாறுபட்டிருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது.

சின்னச்சின்ன மாறுபாடுகளும் வேறுபாடுகளும் வரத்தான் செய்யும். அப்படி வந்துவிட்டால், மணமுறிவு எனும் நிலைக்குச் சென்றாக வேண்டிய சூழலும் இணைந்துகொண்டால், பிரிவது கூட காதலில் சேர்த்திதான்.

கமிட்மெண்ட்... சேர்ந்து வாழவேண்டும் என்கிற கமிட்மெண்ட் என்றெல்லாம் சகித்துக்கொண்டு, கடைசிவரை வாழவேண்டும் என்கிற அவசியமில்லை. இந்த வாழ்க்கை எனக்கு ஒருமுறைதான். அதேபோல் அந்தப் பெண்ணுக்கும் ஒரேயொரு முறைதான். சின்னச் சின்ன சிராய்ப்புகளையெல்லாம் சகித்துக்கொண்டு, வருத்தங்களுடன் வாழ்வதற்கு, பிரிந்து சந்தோஷமாக வாழலாம். சொல்லப்போனால், இதுதான் காதல். எங்களுக்குள் இருக்கிற பொதுவான விஷயம்... குழந்தைகள். அவர்களின் வளர்ச்சிக்காகவும் வாழ்க்கைக்காகவும் எங்களால் ஆன பங்களிப்பை இருவருமே செய்கிறோம்.

எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே எனக்கு குற்ற உணர்ச்சி என எதுவுமில்லை. அப்படி இருந்திருந்தால், நானே சென்று மன்னிப்புக் கேட்டிருப்பேன். எனவே எனக்கு குற்ற உணர்ச்சி இல்லை. உறுத்தல் இல்லை. முக்கியமாக, அவரைப் பற்றி நானோ, என்னைப் பற்றி அவரோ தவறாக எங்கேயும் எவரிடமும் சொல்லுவதே இல்லை. இதில் கவனமாக இருக்கிறேன். இதுவும் கூட காதல்தான்.

முன்பெல்லாம் யாரேனும் பிரிந்துவிட்டால், நானே சென்று அவர்களைச் சேர்த்துவைப்பேன். ஆனால் இப்போது அந்தப் பிரிவு எனக்கு பல விஷயங்களையும் உண்மைகளையும் புரிய வைத்திருக்கிறது. எனவே, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இப்படித்தான் என் பிரிவை எடுத்துக்கொள்கிறேன்.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in