சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘அருவி’ இயக்குநரின் அடுத்த படம் ‘வாழ்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘அருவி’ இயக்குநரின் அடுத்த படம் ‘வாழ்’: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

‘அருவி’ படத்தின் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘வாழ்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான படம் ‘அருவி’. 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படம் வெளியானது. முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்தார். அஞ்சலி வரதன், கவிதாபாரதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே, படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய லட்சுமி ராமகிருஷ்ணனும் படத்தைச் சாடினார்.

ஆனால், படம் வெளியானபிறகு சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, பலரும் பாராட்டினர். இதனால், குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது. படக்குழுவினரை நேரில் அழைத்த ரஜினி, தங்கச் சங்கிலி வழங்கி பாராட்டினார்.

‘அருவி’ படத்துக்குப் பிறகு 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஒரு படத்தைத் தொடங்கினார் அருண் பிரபு. ஆனால், அந்த நிறுவனம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியதால், அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் அருண் பிரபு. சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் மூன்றாவது படமாக இது அமைந்துள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஷெல்லி ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட் செய்துள்ளார்.

பிரதீப் குமார் இசையமைப்பில், குட்டி ரேவதி, அருண் பிரபு, பிரதீப் குமார் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று (ஜூன் 27) வெளியானது. ‘வாழ்’ எனப் படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in